1. ஸ்ரீவெங்கடேஸ்வரா அன்னதான அறக்கட்டளை
‘மக்களுக்குச் செய்யும் சேவையே மகேசனுக்குச் செய்யும் சேவை’ என்ற குறிக்கோளின் அடிப்படையில் எல்லோருக்கும் இலவச உணவு அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது இந்த அறக்கட்டளை. இந்து சமயப் புராணங்களின்படி பசியுள்ளோருக்கு உணவளித்தல் என்பது புனிதச் சடங்குகள் செய்வதற்கு ஒப்பானது. 1964ல் துவக்கப்பட்ட இந்த அறக்கட்டளை இன்று நாளொன்றுக்கு சுமார் 60,000 பேருக்கு அன்னதானம் செய்து வருகிறது.
2. ஊனமுற்றோருக்கான அறுவைச் சிகிச்சை, ஆய்வு மற்றும் மறுவாழ்வு அறக்கட்டளை
இந்த மருத்துவ அமைப்பு, இளம்பிள்ளைவாத நோய், மூளைவளர்ச்சி குன்றிய தன்மை, பிறவி ஊனங்கள், முதுகுத்தண்டு பாதிப்பு, மற்றும் பிற பிரச்சனைகள் தொடர்பானவற்றிற்கு இலவசச் சிகிச்சை அளித்து வருகிறது.
3. ஸ்ரீவேங்கடேஸ்வரா பாரம்பரியப் பாதுகாப்பு அறக் கட்டளை
இந்த அறக்கட்டளை, கோவில்களைப் பாதுகாத்தல், பராமரித்தல் மற்றும் புனர்நிர்மாணம் செய்தல் ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறது.
4. ஸ்ரீ வெங்கடேஸ்வரா வேத பாடசாலை அறக்கட்டளை
2007- ல் துவக்கப்பட்ட இந்த அறக்கட்டளை வேதக் கல்வி, வேத அறிவு மற்றும் வேதக் கலாச்சாரம் ஆகியவற்றின் வளர்ச்சிக் காகப் பாடுபட்டு வருகிறது.
5. ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யா தான அறக்கட்டளை
வறுமைக் கோட்டிற்குக் கீழே இருக்கின்ற, கல்வியில் சிறந்த மாணவர்கள், ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உயர்கல்வி கற்பதற்கு உதவித் தொகை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது இந்த அறக்கட்டளை.
6. பத்மாவதி தாயார் நித்ய அன்னப்பிரசாத அறக்கட்டளை
திருச்சானூரில் இருக்கும் பத்மாவதி தாயாரின் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு இந்த அறக்கட்டளை இலவசமாக உணவு வழங்கி வருகிறது.
7. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோசம்ரக்ஷண அறக்கட்டளை
புனிதமான பசுவைப் பாதுகாக்கும் மேன்மையான நோக்கத்துடன் இந்த அறக்கட்டளை துவக்கப்பட்டது. திருப்பதியிலுள்ள கோசாலைக்கு வெளியே இருக்கும் பசுக்களின் மேம்பாட்டுக்கான தொழில்நுட்பத் தகவல்களை இந்த அறக்கட்டளை பொதுமக்களுடனும் மாட்டுப் பண்ணை வைத்திருப்பவர்களுடனும் பகிர்ந்து கொள்கிறது.
8. ஸ்ரீ வெங்கடேஸ்வரா பிராணதான அறக்கட்டளை
சாதி மதப் பாகுபாடின்றி, புற்றுநோய், இதயநோய், மூளை பாதிப்பு, சீறுநீரக பாதிப்பு ஆகியவற்றால் அல்லலுறும் ஏழை எளிய மக்களுக்கு இந்த அறக்கட்டளை இலவசச் சிகிச்சை அளித்து வருகிறது.