Sunday, March 1, 2015

சமையல் குறிப்புகள்

குதிரைவாலி பொங்கல்
தேவையானவை: குதிரைவாலி அரிசி - அரை கப், பாசிப் பருப்பு - கால் கப், மிளகு - 1 டீஸ்பூன், சீரகம் - 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கொத்து, பெருங்காயம் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: பருப்பு, குதிரைவாலி அரிசி இரண்டையும் கழுவி, 2 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரில் வேகவைக்கவும். பிறகு, கடாயில் எண்ணெய், நெய்யைக் காயவிட்டு, மிளகு, சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளித்து (அடுப்பை `சிம்'மில்வைத்துத் தாளிக்கவும்) அரிசி, பருப்பில் கொட்டி, உப்பு போட்டுக் கிளறிவிட்டு, குக்கரை மூடி வைத்து வெயிட் போட்டு, இரண்டு விசில் வந்தபிறகு, `சிம்'மில் ஐந்து நிமிடங்கள் வைத்து இறக்கவேண்டும்.

வரகு அரிசி தயிர்சாதம்
தேவையானவை: வரகு அரிசி  ஒரு கப், கொழுப்பு நீக்கிய பால் (ஸ்கிம்டு மில்க்)  ஒரு கப், தயிர் (கொழுப்பு நீக்கிய பாலில் இருந்து தயாரிக்கப்பட்டது)  ஒரு கப், மாங்காய் இஞ்சி  விரல் நீளத் துண்டு, பச்சை மிளகாய்  2, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை  சிறிதளவு, உப்பு  ருசிகேற்ப. தாளிக்க: எண்ணெய், கடுகு, பெருங்காயம்  தலா அரை டீஸ்பூன்.
செய்முறை: வரகு அரிசியை இரண்டரை டம்ளர் தண்ணீர் சேர்த்து, குக்கரில் வைத்து நன்கு குழைய வேகவிட்டு எடுக்கவும். பாலைக் காய்ச்சி அதில் ஊற்றி, ஆறவிடவும். பச்சை மிளகாயைக் கீறிக்கொள்ளவும். மாங்காய் இஞ்சியைத் தோல் சீவி, அதையும் கொத்தமல்லி, கறிவேப்பிலையையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, பெருங்காயம் தாளித்து, பச்சை மிளகாய், இஞ்சி போட்டு வதக்கி, கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டுக் கிளறி, வரகு அரிசி சாதத்தில் கொட்டிக் கிளறவும். நன்கு ஆறிய பிறகு, தயிர், உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து சாப்பிடலாம்.
குறிப்பு: புளித்த தயிர் என்றால், தயிர் சாதத்தைத் தயாரித்த உடனேயே சாப்பிடலாம். புளிக்காத தயிர் எனில், சிறிது நேரம் வைத்திருந்து சாப்பிட்டால்தான் சுவையாக இருக்கும்.
கொள்ளு அடை
தேவையானவை: முளைக்கவைத்த கொள்ளு  அரை கப், குதிரைவாலி அரிசி (அல்லது) தினை, மைசூர் பருப்பு, கடலைப் பருப்பு, முழு உளுந்து  தலா கால் கப், வரமிளகாய்  3 அல்லது 4, இஞ்சித் துருவல்  அரை டீஸ்பூன், கறுப்பு எள்  ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி  சிறிதளவு, உப்பு  சுவைக்கேற்ப, எண்ணெய்  தேவையான அளவு.
செய்முறை: கொள்ளுவைத் தனியாகவும், குதிரைவாலி அரிசி, மைசூர் பருப்பு, கடலைப்பருப்பு, உளுந்து ஆகியவற்றைத் தனியாகவும் தண்ணீரில் ஊறவைக்கவும். வெறும் வாணலியில் எள்ளை லேசாக வறுத்தெடுக்கவும். உப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை மிக்ஸியில் இரண்டு சுற்றுச் சுற்றி எடுக்கவும். அத்துடன் முதலில் கொள்ளு சேர்த்து இரண்டு சுற்றுக்கள் அரைத்து, பிறகு மீதி உள்ள ஊறவைத்த பருப்பு வகைகளைச் சேர்த்து, இஞ்சி, எள் சேர்த்து கரகரவென அரைத்தெடுக்கவும். அடை மாவில் கொத்தமல்லியைப் பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கலந்து, தவாவில் லேசாக எண்ணெய் தடவி, வார்த்தெடுக்கவும். மூடி போட்டு வேகவிடவும். பிறகு, திருப்பிப் போட்டு எடுக்கவும்.
குறிப்பு: கொள்ளு, புரதம் மற்றும் ஆக்ஸிகரணிகளைக் கொண்டுள்ளது. மேலும் மெதுவான ஜீரணத்தால், அதிக சர்க்கரையின் அளவை (Post prandial Hyperglycemia) அளவைக் குறைத்துவிடும் தன்மையைக் கொண்டுள்ளது. குதிரைவாலியும் புரதம் மற்றும் நார்ச்சத்தைக் கொண்டுள்ளதால், சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும். பருப்பு வகைகளில் அதிகப் புரதம் உள்ளது.
தினை அரிசி துவையல்

தேவையானவை: தினை அரிசி - கால் கப், உளுத்தம்பருப்பு, தேங்காய்த் துருவல் - தலா 2 டேபிள்ஸ்பூன், புளி - சிறிய நெல்லிக்காய்  அளவு, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு (தாளிக்க) - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 6, உப்பு - தேவையான அளவு.


செய்முறை: வெறும் வாணலியில், தினை அரிசியை பொரியும் வரை வறுக்கவும். அதே வாணலியில் அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை சிவக்க வறுக்கவும். பிறகு பெருங்காயத்தூள், தேங்காய்த் துருவல் சேர்த்து வறுத்து ஆறவிடவும். வறுத்தவற்றை மிக்ஸியில் சேர்த்து புளி, உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி நைஸாகவும் இல்லாமல், கொரகொரப்பாகவும் இல்லாமல் அரைக்கவும். மிக்ஸி ஜாரை கழுவி, அந்த தண்ணீரையும் அரைத்த கலவையில் ஊற்றி கரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு சேர்த்து பொரிய விட்டு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்துத்தாளிக்கவும். இத்துடன் நறுக்கிய சின்ன வெங்காயம், உப்பு ஒரு சிட்டிகை சேர்த்து வதக்கவும். கரைத்த கலவையை தாளித்தவற்றில் ஊற்றி கொதிக்கவிடவும். கலவை சற்று கெட்டியானதும் இறக்கவும். சாதத்தில் போட்டு, நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி பிசைந்து சாப்பிடவும். இட்லி, தோசை, சப்பாத்திக்கும் ஏற்ற சைட் டிஷ் இது.


நினைவுத்திறனுக்கு வல்லாரை சூப்

தேவையானவை: வெங்காயம் – 2, மிளகு – ஒரு டீஸ்பூன், சீரகம் – ஒன்றரை டீஸ்பூன், பூண்டுப்பல் – 10, பச்சைமிளகாய் -2, தக்காளி – 3, வல்லாரைக் கீரை - ஒரு கட்டு (பொடியாக நறுக்கியது), கொத்தமல்லி - சிறிது, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெங்காயம், மிளகு, சீரகம், பூண்டு, பச்சைமிளகாய், தக்காளியைப் பச்சையாக மிக்ஸியில் அரைத்துக்கொள்ள வேண்டும். இந்த விழுதில், தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைக்க வேண்டும். ஒரு கொதிவந்ததும், நறுக்கிய வல்லாரைக் கீரையைச் சேர்க்க வேண்டும். கீரை பாதி அளவுக்கு வெந்ததும், உப்பு சேர்த்து, கொத்தமல்லி தூவி இறக்க வேண்டும். கீரையை நீண்ட நேரம் வேகவைக்கக் கூடாது.

பலன்கள்: நினைவாற்றல் அதிகரிக்கும். உடலுக்குக் குளிர்ச்சி தரும். இதயத்துக்கு நல்லது. ரத்தத்தைச் சுத்திகரிக்கும். சோர்வை நீக்கும். பசியைத் தூண்டும். தாகத்தைத் தணிக்கும்.

No comments: