Wednesday, March 2, 2016

புறநானூறு - 38. வேண்டியது விளைக்கும் வேந்தன்!

இப்பாட்டின் ஆசிரியர் ஆவூர் மூலங்கிழார் ஆவூர் மூலம் என்ற ஊரினர். 
ஒருசமயம் இவர் இக் கிள்ளி வளவனைக் காண வந்தார். கிள்ளிவளவன், “நீவிர் எந்நாட்டீர்? நீர் எம்மை நினைத்தலுண்டோ?” என்று கேட்டான். 

புறநானூறு - 38. வேண்டியது விளைக்கும் வேந்தன்!

பாடியவர்: ஆவூர் மூலங் கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
திணை: பாடாண். 
துறை: இயன்மொழி,
குறிப்பு: 'எம்முள்ளீர், எந்நாட்டீர்?' என்று அவன் கேட்ப, அவர் பாடியது.

வரைபுரையு மழகளிற்றின்மிசை 
வான் றுடைக்கும் வகையபோல 
விர வுருவின கொடி நுடங்கும் 
வியன்றானை விறல்வேந்தே 
நீ, உடன்றுநோக்கும்வா யெரிதவழ 

நீ, நயந்துநோக்கும்வாய் பொன்பூப்பச் 
செஞ்ஞாயிற்று நிலவுவேண்டினும் 
வெண்டிங்களுள் வெயில்வேண்டினும் 
வேண்டியது விளைக்கு மாற்றலை யாகலின் 
நின்னிழற் பிறந்து நின்னிழல் வளர்ந்த 

எம்மள வெவனோ மற்றே யின்னிலைப் 
பொலம்பூங் காவி னன்னாட் டோரும் 
செய்வினை மருங்கி னெய்த லல்லதை 
உடையோ ரீதலு மில்லோ ரிரத்தலும் 
கடவ தன்மையிற் கையற வுடைத்தென 

ஆண்டுச்செய் நுகர்ச்சி யீண்டுங் கூடலின் 
நின்னா டுள்ளுவர் பரிசிலர் 
ஒன்னார் தேஎத்து நின்னுடைத் தெனவே. 

பொருளுரை:

இப்பாட்டின் ஆசிரியர் ஆவூர் மூலங்கிழார் ஆவூர் மூலம் என்ற ஊரினர். 
ஒருசமயம் இவர் இக் கிள்ளி வளவனைக் காண வந்தார். கிள்ளிவளவன், “நீவிர் எந்நாட்டீர்? நீர் எம்மை நினைத்தலுண்டோ?” என்று கேட்டான். 

அதற்கு, ஆவூர் மூலங்கிழார், “மலையை ஒத்த இளம் யானைகளின்மேல் ஆகாயத்தைத் தொட்டுத் 
துடைப்பது போன்ற பல நிறங்கள் கலந்த கொடிகள் அசைந்து தோன்றும் பெரும் படையை உடைய வெற்றி வேந்தனே! 

நீ கோபத்துடன் பார்க்குமிடம் நெருப்பு பரவ நீ கருணையுடன் பார்க்குமிடம் பொன் பூத்துச் சிறக்க சிவந்த சூரியனில் நிலவை விரும்பினாலும் 
வெண்மையான சந்திரனில் வெயிலை விரும்பினாலும் வேண்டியதை விளைவிக்கும் ஆற்றல் உடையவன். 

இனிமையான நிலையை உடைய, பொன்னாலான பூக்கள் நிறைந்த கற்பகச் சோலைகள் உள்ள நல்ல நாடாகிய விண்ணுலகத்தில் உள்ளோர்களும் 
தாம் செய்த நல்வினைக்கேற்ப இன்பம் அனுபவிக்க முடியுமே தவிர, செல்வமுள்ளவர்கள் வறியோர்க்கு வழ்ங்குவதும்,
வறியவர்கள் செல்வமுடையவரிடம் சென்று யாசித்தலும் அங்கே செய்ய இயலாது என்பதனால் 
அதைச் செய்ய முடியாதென எண்ணி, அங்கே பெறும் இன்பம் இவ்விடத்திலே உனது நாட்டில் பெற முடியும். 

பகைவர் தேசத்திலிருந்தாலும், பரிசு பெற விழைவோர் உனது நாட்டில் நீ இருக்கின்றாய் என்று கருதுவதால் உனது நாட்டையே நினைப்பர். 
ஆதலால் உனது நிழலில் பிறந்து உனது நிழலில் வளர்ந்த எம் நினைவின் அளவு எவ்வளவு என்று சொல்லவும் வேண்டுமோ?” 
என்று இப்பாடலில் கிள்ளி வளவனைப் பாராட்டுகின்றார். 


Description: (A Song About Sozhan Killivalavan)
Oh great king having powerful army which has colorful flags which wave up to the sky as the warriors have sit on the elephants which are like hills. 
If you look with anger that place will burn in red fire. 
If you look with cool heart that place will shine like gold. 

You have the power to make the hot sun into cold moon and the cold moon into hot sun which is like a fire planet. 
Is it necessary to say how we are living under the shadow of your white umbrella? 
Those who live in heaven where the heavenly park which blossoms with golden flowers ,enjoy pleasure according to their good deeds. 
As there are no poor people they cannot enjoy the pleasure of giving to the poor. 
Though the persons who seek heavenly pleasure and gifts live in your enemy country, they will always thinking you and your country. 
-Aavoor Moolangkizhaar


முலம்:




Tuesday, March 1, 2016

புறநானூறு - 37. புறவும் போரும்!

நப்பசலையார் இப்பாட்டில், ‘
புறாவுக்கு நேர்ந்த துன்பத்தைத் தீர்த்த ஒளி பொருந்திய வேலுடன் சினங்கொண்ட படையினை உடைய செம்பியன் வழித்தோன்றலே! பெருந்தகையே! 

புறநானூறு - 37. புறவும் போரும்!

பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை: வாகை; உழிஞை எனவும் பாடம்.
துறை: அரச வாகை குற்றுழிஞை எனவும், முதல் வஞ்சி எனவும் பாடம். 

நஞ்சுடை வாலெயிற் றைந்தலை சுமந்த 
வேக வெந்திற னாகம் புக்கென 
விசும்புதீப் பிறப்பப் திருகிப் பசுங்கொடிப் 
பெருமலை விடரகத் துருமெறிந் தாங்குப் 
புள்ளுறு புன்கண் டீர்த்த வெள்வேற் 

சினங்கெழு தானைச் செம்பியன் மருக 
கராஅங் கலித்த குண்டுகண் ணகழி 
இடங்கருங் குட்டத் துடன்றொக் கோடி 
யாமங் கொள்பவர் சுடர்நிழற் கதூஉம் 
கடுமுரண் முதலைய நெடுநீ ரிலஞ்சிச் 

செம்புறழ் புரிகைச் செம்மல் மூதூர் 
வம்பணி யானை வேந்தகத் துண்மையின் 
நல்ல வென்னாது சிதைத்தல் 
வல்லையா னெடுந்தகை செருவத் தானே.


பொருளுரை:
நப்பசலையார் இப்பாட்டில், ‘
புறாவுக்கு நேர்ந்த துன்பத்தைத் தீர்த்த ஒளி பொருந்திய வேலுடன் சினங்கொண்ட படையினை உடைய செம்பியன் வழித்தோன்றலே! பெருந்தகையே! 

பசுமையான கொடிகளையுடைய பெரிய மலையின் பிளவுகளுள்ள பகுதிகளில் நஞ்சுடைய வெண்மையான பற்களையும், 
ஐந்து தலைகளையும் கொண்ட மிக சீற்றமும் சினமும் உடைய நாகப்பாம்பு புகுந்தது. வானம் தீப்பிடித்து வேகமாகப் பரவி இடி விழுந்து அங்கே தாக்கி அந்த நாகத்தை அழித்தது. 


அதுபோல், முதலைகளில் ஒருவகையான கராம் என்ற ஆண் முதலைகள் நிறைய உள்ள, கோட்டை யைச் சுற்றி அமைக்கப்பட்ட ஆழமான நீர் நிறைந்த அகண்ட பள்ளங்களின் (அகழி) 
இருண்ட மடுக்களில் அவைகள் ஒன்று சேரத் திரண்டோடி நடுச்சாமங்களில் ஊர்க்காவல் செல்வோரின் நிழலைக் கண்டு கவ்வுகின்றன. 

அத்தகைய முரட்டு முதலைகளையுடைய மிக நீளமான நீர்நிலைகளும், செம்பு மிகுதியாக உபயோகித்து அமைக்கப்பட்ட மதிலும் உடைய மிகச் சிறப்புடைய பழைய ஊரினுள்ளே முகபடாம் 
அணிந்த யானைகளுடைய அரசன் உள்ளே இருப்பதை எல்லாம் நல்லவை என்றுகூடக் கருதாது போரில் அவற்றை அழிப்பதில் வல்லவனாய் நீ இருந்தாய்’ 
என்று கிள்ளி வளவனின் மறம் வியந்து, அவனது வாகைநலத் தைப் பாராட்டுகின்றார்.

Description:( A Song About Sozhan Kulamuttraththuth Thunjchiya Killivalavan)
Oh king! You invade your enemies' countries like a cruel snake which has poison, sharp teeth and five heads. 
Like the thunder which destroys the big mountain covered by green creepers, you have fired your enemies' towns. 

Oh the successor of Sembiyan who had victorious vel and brave army! 
You have the power of destroying deep ahazhies which have many crocodiles which try to eat the images of the guards thinking that they are human beings, 
walls which are like copper and forceful elephant army. 

Oh great king! You born in a famous family which removed the sorrow of a pigeon. 
What a great power do you have! -Maarokkaththu Nappasalaiyaar



முலம்: