பாடியவர்: கபிலர்
திணை: பொதுவியல்
துறை: கையறுநிலை
வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ்சுவல்
கார்ப்பெயல் கலித்த பெரும்பாட்டு ஈரத்துப்
பூழி மயங்கப் பலஉழுது வித்திப்
பல்லி ஆடிய பல்கிளைச் செவ்விக்
களை கால் கழாலின், தோடு ஒலிபு நந்தி
மென்மயிற் புனிற்றுப்பெடை கடுப்ப நீடிக்
கருந்தாள் போகி ஒருங்குபீள் விரிந்து
கீழும் மேலும் எஞ்சாமைப் பலகாய்த்து
வாலிதின் விளைந்த புதுவரகு அரியத்
தினைகொய்யக் கவ்வை கறுப்ப அவரைக்
கொழுங்கொடி விளர்க்காய் கோள்பதம் ஆக
நிலம்புதைப் பழுனிய மட்டின் தேறல்
புல்வேய்க் குரம்பைக் குடிதொறும் பகர்ந்து
நறுநெய்க் கடலை விசைப்பச் சோறுஅட்டுப்
பெருந்தோள் தாலம் பூசல் மேவர
வருந்தா யாணர்த்து நந்துங் கொல்லோ
இரும்பல் கூந்தல் மடந்தையர் தந்தை
ஆடுகழை நரலும் சேட்சிமைப் புலவர்
பாடி ஆனாப் பண்பிற் பகைவர்
ஓடுகழல் கம்பலை கண்ட
செருவெஞ் சேஎய் பெருவிறல் நாடே!
பொருளுரை:
வெப்பம் நிறைந்ததாகவும் வேங்கை மரங்களுடையதுமான சிவந்த மேட்டு நிலத்தில்
கார்காலத்து மழைக்குப் பிறகு மிகுந்த ஈரமான பெரிய இடத்தில் புழுதி கலக்குமாறு
உழவர்கள் பலமுறை உழுது பின்னர் விதைகளை விதைக்கின்றனர்.
அதன் பிறகு, பல்லியாடி நெருங்கி முளைத்தப் பயிர்களைப் பிரிப்பதோடு
மட்டுமல்லாமல் களைகளையும் நீக்குகின்றனர்.
பல கிளைகளையுடைய வரகுப் பயிர்களிலிருந்து களைகள்
அடியோடு நீக்கப்பட்டதால் அவை இலைகளுடன் தழைத்துப் பெருகி,
கரிய தண்டுகள் நீண்டு, அண்மையில் முட்டையிட்ட மெல்லிய
மயில்களின் நிறத்தோடு காட்சி அளிக்கின்றன.
எல்லாக் கதிர்களும் விரிந்து, அடியிலும் மேல் பாகத்திலும்
காய்த்து சீராக விளைந்த புதிய வரகை உழவர்கள் அறுவடை செய்கின்றனர்.
தினைகளைக் கொய்கின்றனர். எள்ளிளங்காய்கள் முற்றி இருக்கின்றன.
அவரையின் வெண்ணிறக்காய்கள் பறிப்பதற்கு ஏற்ற நிலையில் உள்ளன.
நிலத்தில் புதைக்கப்பட்ட முதிர்ந்த கள்ளை புல்லைக் கூரையாகக்கொண்ட
குடிசையில் உள்ள மக்கள் அனைவருக்கும் கொடுக்கின்றனர்.
மணம் வீசும் நெய்யில் கடலையை வறுத்து அதைச் சோறோடு சேர்த்துச் சமைத்து
அனைவருக்கும் மகளிர் உணவளித்துப் பின்னர் பாத்திரங்களைக் கழுவுகின்றனர்.
கரிய கூந்தலுடைய மகளிரின் தந்தையாகிய பாரி,
அசையும் மூங்கில் ஒலிக்கும் உயர்ந்த மலை உச்சியையுடையவன்.
அவன் புலவரால் பாடப்படும் பெருமையில் குறைவற்றவன்.
பகைவர் புறமுதுகு காட்டி ஓடும் ஆரவாரத்தைக் கேட்டவன்.
அவன் போரை விரும்பிய முருகனைப் போன்ற பெரிய வெற்றியையுடையவன்.
அவன் நாடு, வருந்தாமல் கிடைக்கும் புது வருவாய் உள்ள நாடு.
அந்நாடு அழிந்துவிடுமோ?
Description (A Song about Vel Paari)
It is a red soil land where there are a lot of vengai trees.
The rain has stopped.
The wet land is ploughed and seeds are sowed.
The weeds are removed.
The ears of varahu and thinai plants are harvested.
The seeds of sesame and beans are plucked.
The arrack that was kept under the earth
is served to the people who are in the grass thatched huts.
The wives serve the peanut roasted with ghee and cooked rice in big plates.
The Parambu hill is very fertile.
The daughters of Paari hear the sound of the chappals of the enemies who run back.
Paari does not like to follow them driving. He has boundless fame.
In Parambu hill, the bamboo trees are waving in the wind.
As Paari is not alive now, his country
has lost its fertility and has become ruined.
-Kapilar
முலம்:
No comments:
Post a Comment