Wednesday, May 11, 2016

புறநானூறு - 98. வளநாடு கெடுவதோ!

புறநானூறு - 98. வளநாடு கெடுவதோ!
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : வாகை. 
துறை: அரச வாகை. திணை: வஞ்சியும், துறை; கொற்றவள்ளையுமாம். 

முனைத்தெவ்வர் முரண்அவியப்
பொரக்குறுகிய நுதிமருப்பின்நின்
இனக்களிறு செலக்கண்டவர்
மதிற்கதவம் எழுச்செல்லவும்,

பிணன்அழுங்கக் களன்உழக்கிச்
செலவுஅசைஇய மறுக்குளம்பின்நின்
இனநன்மாச் செலக்கண்டவர்
கவைமுள்ளின் புழையடைப்பவும்,
மார்புறச் சேர்ந்துஒல்காத்

தோல்செறிப்பில்நின் வேல்கண்டவர்
தோல்கழியொடு பிடிசெறிப்பவும்,
வாள்வாய்த்த வடுப்பரந்தநின்
மறமைந்தர் மைந்துகண்டவர்
புண்படுகுருதி அம்புஒடுக்கவும்,

நீயே, ஐயவி புகைப்பவும் தாங்காது, ஒய்யென
உறுமுறை மரபின் புறம்நின்று உய்க்கும்
கூற்றத்து அனையை; ஆகலின்,போற்றார்
இரங்க விளிவது கொல்லோ; வரம்புஅணைந்து
இறங்குகதிர் அலம்வரு கழனிப்

பெரும்புனல் படப்பைஅவர் அகன்றலை நாடே.

பொருளுரை:

போர்முனையில் பகைவரது வலிமை அடங்குமாறு போர்புரிந்ததால் குறைந்த (உடைந்த) 
நுனியுடன் கூடிய கொம்புகளுடைய உனது யனைகள் கூட்டமாகச் செல்வதைக் கண்டவர்கள் மதிற்கதவுகளில் 
கணையமரங்களைப் பொருத்திக் கொள்கின்றனர். 

பிணங்கள் உருவழியுமாறு போர்க்களத்தில் அவற்றை மிதித்து, 
தங்கள் கால்கள் வருந்துமாறு சென்றதால் குருதிக்கறைப் படிந்த குளம்புகளுடைய 
உன் சிறப்புக்குரிய குதிரைகள் கூட்டமாகச் செல்வதைக் கண்டவர்கள் 
காட்டுவாயில்களை கிளைகளாய் பிளவுபட்ட முட்களை வைத்து அடைக்கின்றனர். 

உறையில் இருந்து எடுத்த வேல்களை உன் வீரர்கள் பகைவர்களின் மீது எறிய 
அவை அவர்களை ஊடுருவிச் சென்றன. 

அதைக்கண்ட உன் பகைவர்கள் தங்கள் கேடயங்களின் காம்புகளோடு (புதிய) பிடிகளைப் பொருத்திக் கொள்கின்றனர்.
 வாள் பாய்ந்ததால் உண்டாகிய தழும்புகளுடைய உன் வீரர்களின் வலிமையைக் கண்டவர் 
குருதிக்கறைப் படிந்த தங்கள் அம்புகளைத் தங்கள் அம்புறாத்தூணிகளில் அடக்கிக் கொள்கின்றனர். 

நீயோ, (தன்னை இயமனிடத்திலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக) சிறிய வெண்கடுகுகளைப் புகைத்தாலும் 
அதைப் பொருட்படுத்தாது விரைந்து வந்து சேர்ந்து முறைப்படி புறத்தே இருந்து உயிரைக் கொண்டுபோகும் 
இயல்புடைய இயமனைப் போன்றவன். 

ஆதலால், வரப்புகளைச் சார்ந்து வளைந்து ஆடும் நெற்கதிர்களுடைய வயலொடு 
மிக்க நீர்ப்பகுதிகளையுமுடைய உன் பகைவர்களின் அகன்ற 
இடங்களுடைய நாடு அவர்கள் வருந்துமாறு அழிந்துவிடுமோ?


Description: (A Song About Adhiyamaan Nedumaan Anji)
On seeing your elephant army which has made the enemies to loose their strength 
your enemies will remove the old doors of the forts to fix new doors. 

On seeing your horse army which has frightened the battle field, 
your enemies will close the gates of their forest forts with the thorns of the karuvela trees. 

On seeing your vel which has pierced the chests of your enemies, 
they make new handles and leather covers for their shields. 

Knowing your warriors strength, they put their arrows in the aavam. 
You don't bother about smoking the white mustard and you are like Yamaa who takes the lives. 
Is it necessary to destroy your enemies' countries which have vast fertile land? 
-Awvaiyaar


முலம்:
http://puram400.blogspot.in/2009/09/98.html
http://thamizhanna.blogspot.in/2010/10/purananooru-71-to-100-english.html


No comments: