Monday, February 22, 2016

புறநானூறு - 29. நண்பின் பண்பினன் ஆகுக!


புறநானூறு - 29. நண்பின் பண்பினன் ஆகுக!

பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.
பாடப்பட்டோன் : சோழன் நலங்கிள்ளி. 
திணை: பொதுவியல்.
துறை : முதுமொழிக் காஞ்சி. 
சிறப்பு : சிறந்த அறநெறிகள். 


அழல் புரிந்த அடர் தாமரை
ஐது அடர்ந்ற நூற் பெய்து,
புனை விளைப் பொலிந்த பொலன் நறுந் தெரியல்
பாறு மயிர் இருந்தலை பொலியச் சூடிப்,
பாண் முற்றுக, நின் நாள்மகிழ் இருக்கை!

பாண் முற்று ஒழிந்த பின்றை, மகளிர்
தோள் முற்றுக, நின் சாந்துபுலர் அகலம்! ஆங்க
முனிவில் முற்றத்து, இனிது முரசு இயம்பக்,
கொடியோர்த் தெறுதலும், செவ்வியோர்க்குஅளித்தலும்,
ஒடியா முறையின் மடிவிலை யாகி

நல்லதன் நலனும் தீயதன் தீமையும்
இல்லை என்போர்க்கு இனன் ஆகி லியர்!
நெல்விளை கழனிப் படுபுள் ஓப்புநர்
ஒழி மடல் விறகின் கழுமீன் சுட்டு,
வெங்கள் தொலைச்சியும் அமையார், தெங்கின்

இளநீர் உதிர்க்கும் வளமிகு நன்னாடு
பெற்றனர் உவக்கும் நின் படைகொள் மாக்கள்
பற்றா மாக்களின் பரிவு முந்து உறுத்துக்,
கூவை துற்ற நாற்கால் பந்தர்ச்,
சிறுமனை வாழ்க்கையின் ஒரீஇ, வருநர்க்கு

உதவி ஆற்றும் நண்பின் பண்புடை
ஊழிற்று ஆக, நின் செய்கை! விழவின்
கோடியர் நீர்மை போல முறை முறை
ஆடுநர் கழியும்இவ் உலகத்துக், கூடிய
நகைப் புறனாக, நின் சுற்றம்!

இசைப்புற னாக, நீ ஓம்பிய பொருளே!


பொருளுரை: 

நெருப்பால் உருக்கி தகடாகச் செய்த தாமரை மலர்களை, 
நுண்மையாகத் தட்டி கம்பியாகச் செய்த நூலில் கோர்த்து தொழில் திறமையால் பொலிவுடன் 
அமைத்த பொன்னாலான நல்ல மாலையை பரந்து விரிந்த கரிய முடியுள்ள தலையில் அழகுற அணிந்து பாணர்கள் கூட்டம் பகல் நேரங்களில் மகிழ்ச்சியுடன் உன் அரசவையில் சூழ்ந்திருக்கும். 

உன்னைச் சுற்றியுள்ள பாணர்கள் சென்ற பின்னால் உனக்கு உரிய மகளிர் தோள் உனது சந்தனம் பூசிய மார்பைத் தழுவட்டும்! 

கண்ணுக்கினிய அலங்காரத்தால் தன்னிடம் வந்தாரை நீங்காதவாறு பிணித்து இன்புறுத்தும் சிறப்புடைய அரசவை மண்டபத்தில் இனிதாக முரசு ஒலிக்க, 
தீயோர்க்குத் தண்டனை அளித்தும், தகுதியுடையோர்க்கு தகுந்த பரிசுகள் அளித்தும் நேர்மை மாறாத முறையால் சோம்பலும் கவனக் குறைவும் இல்லாது நற்செயல்கள் செய்தால் 
நன்மையும், தீச்செயல்கள் செய்தால் தீமையும் விளையும் என்பதை இல்லையென மறுப்போருடன் உடன்பட்டுச் சேராது இருப்பாயாக! 

நெல் விளையும் வயல்களில் நெற்கதிர்களை இரை தேடி மேய்ந்துண்ணும் கிளி முதலிய பறவைகளை ஓட்டுவோர் 
காய்ந்து வீழ்ந்த பனங்கருக்கு விறகு நெருப்பில் கழிக்கண் மீனைச் சுட்டு விருப்பமான கள்ளைக் குடித்ததோடு நில்லாமல் 
தென்னையின் இளநீரையும் அருந்தும் செல்வ மிக்க நல்ல நாட்டைப் பெற்று மகிழும் உனது படைக்கலம் பிடித்த மாந்தர். 

உன்னிடம் பகை கொண்ட மாந்தர் இரக்கத்தை எதிர்பார்த்து கூவை இலையால் வேயப்பட்ட நான்கு கால் பந்தலாகிய சிறிய வீட்டு வாழ்க்கையினின்று நீங்கி 
உன்னிடம் வரும் அவர்களுக்கு உதவி செய்யும் நட்பான குணமுடைய உன் செயல் முறையானது. 

எனவே திருவிழாவில் கூத்தாடுபவர்கள் வேறு வேறு வேடம் தரித்து ஆடுவதுபோல் அவரவ்ர் பிறந்து வாழ்ந்து இறந்து போகின்ற இவ்வுலகத்தில் 
மிகுந்த மகிழ்வுடன் இருக்கட்டும் உன் உறவுச் சுற்றம். நீ பாதுகாத்த செல்வம் உனக்குப் புகழ் அளிக்கட்டும்! 

Description: (A Song About Sozhan Nalangkilli)

Let your court be filled with Paanaas who have worn golden garlands made up of golden lotuses on their barren black heads. 
Let your broad chest with sandal powder be embraced by your kind wives after praised by the Paanaas. 

Let the murasu be sounded in the beautiful courtyard of your palace. 
Let punishing the evil and showing mercy to the good be done by you continuously. 

You should avoid those who refuse that there is no fruit for good deeds and suffering for the bad deeds. 
Your warriors drive away the birds which come to the paddy field. 

They light fire on the palm leaves and roast the fish caught from the back waters. They eat fish and drink sour toddy. 
They nave a fertile land where there are tender coconut shedding coconut trees. 

It is your duty to rescue your warriors from living a mean life like your enemies who live in small huts. 
It is also your duty to make your warriors to give who come begging. 
This worldly life is like the dancers who assemble in the festival, dance and disperse after the festival. 
In this unstable life , let the people around you and your relatives be happy. 

Let the wealth earned by you be praised by all. 

-Mudhukannan SaaththanaarNo comments: