Monday, February 8, 2016

புறநானூறு - 15. எதனிற் சிறந்தாய்?

புறநானூறு - 15. எதனிற் சிறந்தாய்?

பாடியவர் :நெட்டிமையார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி
திணை : பாடாண். 
துறை : இயன்மொழி 

கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்,
வெள்வாய்க் கழுதைப் புல்லினப் பூட்டிப்,
பாழ்செய் தனை, அவர் நனந்தலை நல்லெயில்;
புள்ளினம் இமிழும் புகழ்சால் விளைவயல்,
வெள்ளுளைக் கலிமான் கவிகுளம்பு உகளத்

தேர்வழங் கினைநின் தெவ்வர் தேஎத்துத்;
துளங்கு இயலாற், பணை எருத்தின்,
பா வடியாற்,செறல் நோக்கின்,
ஒளிறு மருப்பின் களிறு அவர
காப் புடைய கயம் படியினை;

அன்ன சீற்றத்து அனையை; ஆகலின்,
விளங்கு பொன் எறிந்த நலங்கிளர் பலகையொடு
நிழல்படு நெடுவேல் ஏந்தி ஒன்னார்
ஒண்படைக் கடுந்தார் முன்புதலைக் கொண்மார்,
நசைதர வந்தோர் நசைபிறக்கு ஒழிய,

வசைபட வாழ்ந்தோர் பலர்கொல்? புரையில்
நற் பனுவல் நால் வேதத்து
அருஞ் சீர்த்திப் பெருங் கண்ணுறை
நெய்ம் மலி ஆவுதி பொங்கப், பன்மாண்
வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி,

யூபம் நட்ட வியன்களம் பலகொல்?
யாபல கொல்லோ? பெரும! வார் உற்று
விசிபிணிக் கொண்ட மண்கனை முழவின்
பாடினி பாடும் வஞ்சிக்கு
நாடல் சான்ற மைந்தினோய்! நினக்கே.


பொருளுரை: 

விரைந்து செலுத்தப்படும் தேரினால் எங்கும் குழிகளாக்கப்பட்ட தெருக்களை வெளிறிய வாயையுடைய இழிந்த மிருகக் கூட்டத்தைச் சேர்ந்த கழுதைகளைப் பூட்டி உழுது பாழாக்கினாய்! 

பகைவர்களின் அகன்ற இடங்களையுடைய நல்ல அரண்களையும், பறவையினங்கள் ஒலிக்கும் புகழுடன் கூடிய விளையும் வயல்களையும் வெளிறிய பிடரிமயிர்களை உடைய குதிரைகளின் கவிந்த குளம்புகள் ஊன்றித் தாவிப்பாய உன் பகைவர் வாழும் நாட்டில் தேரைச் செலுத்தினாய்! 

அசையும் தன்மையுடைய பெருத்த கழுத்தினையும் பரந்த காலடியோடு கோபம் கொப்பளிக்கும் பார்வையினையும் பிரகாசமான தந்தக் கொம்பு களையும் உடைய களிற்றை அப்பகைவரின் காவலுடைய நீர்நிலைகளில் நீராட்டிக் கலக்கி அழித்தாய்! அப்பேர்ப்பட்ட சினத்துடன் செயல்படும் இயல்பினை உடையவன் நீ! 

ஆதலால், தரமான இரும்பால் செய்யப்பட்ட ஆணியும், பட்டமும் அறைந்த அழகு மிகுந்த கேடயத்துடன நிழல் உண்டாக்கும் நெடிய வேலை எடுத்து உன் பகைவர், சிறந்த படைக்கலங்களை உடைய உனது விரைந்த தூசிப்படையின் வலிமையைக் கெடுத்து அழிக்க எண்ணி ஆசையோடு வந்தனர். அந்த ஆசை அழிந்தொழிய பழியுடன் வாழ்ந்தோர் பலரா? 

ஒப்புயர்வில்லாத நல்ல தரும நூல் மற்றும் நால்வகை வேதங்களிலும் சொல்லப்பட்ட அருமை மிகுந்த புகழுக்குரிய ஒன்பது வகையான, யாகத்தில் இடக்கூடிய சமிதைப் பொருட்களாகிய ஆல், அரசு, அத்தி, இத்தி, மா, பலாசு, வன்னி, நாயுருவி, கருங்காலி என்பவற்றின் சுள்ளிகளை நெய் மிகுந்த ஆகுதியில் இட்டு மாட்சிமையுடைய குறைவில்லாத சிறப்புடன் யாகங்கள் பல முடித்து தூண்கள் நடப்பட்ட அகன்ற வேள்விச்சாலைகள் பலவோ? 

வார் பொருத்தி இறுக்கிக் கட்டி, இனிது ஒலிக்கும்படி ஒருவகை மண்ணால் ஆகிய கருஞ்சாந்து பூசப்பட்ட முழவு வாசிப்புடன் உன் படையெடுப்புகளைப் புகழ்ந்து பாடும் பாடினியின் பாட்டுக்கேற்ப ஆராய்ந்து அமைந்த வலிமை உடையோய்! இவற்றுள் உனக்கு எவைகள் பல, பெருமானே! 

திணையும், துறையும்: ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது பாடாண்திணை ஆகும். இப்பாடலில் பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதியின் படை வலிமையையும், அவன் செய்யும் வேள்விகளின் பெருமையையும் போற்றிக் கூறுவதால் இது பாடாண் திணையாகும். இவ்விரண்டு செயல்களையும் எப்பொழுதும் செய்தல் இயல்பெனக் கூறுவதால், இது இயன்மொழி துறை ஆயிற்று


Description: (A Song About Palyaahasaalai Mudhukudumip Peruvazhudhi)

Oh Vazhudhi! You destroyed the streets where the chariots run by ploughing with white mouthed asses.

In the fertile lands where the birds twitter, you drove chariots which were drawn by horses with white manes, convex hoofs and destroyed them. You destroyed the lakes by sending elephants which have moving big necks, frightening eyes, broad feet and sharp tusk. You are so angry in defeating your enemies. 

The enemies come with shields made of gold and long vels have a desire to attack you. They retrace and live with blame. 


You erected so many pillars after doing never-vanishing best velvis, by adding ghee, puffed rice etc, according to the rules that are found in the harmless four vedas.

 Oh lord, the muzhavu which is tightly tied is played and the female singer sings your fame.

 In the following two which is greater? Either the victorious wars? Or noble velvis? -Nettimaiyaar

முலம்:http://thamizhanna.blogspot.in/2010/05/purananooru-first-15-songs-english.html

No comments: