Tuesday, July 26, 2016

புறநானூறு - 136. வாழ்த்தி உண்போம்!

புறநானூறு - 136. வாழ்த்தி உண்போம்!

பாடியவர்: துறையூர் ஓடை கிழார்
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்
திணை: பாடாண்
துறை: பரிசில் கடாநிலை சிறப்பு: 
வாழ்வை ஊடறுக்கும் பகைகள் பலவற்றைப் பற்றிய செய்தி. 

யாழ்ப்பத்தர்ப் புறம்கடுப்ப
இழைவலந்த பஃறுன்னத்து
இடைப்புரைபற்றிப் பிணிவிடாஅ
ஈர்க்குழாத்தொடு இறைகூர்ந்த

பேஎன்பகையென ஒன்றுஎன்கோ?
உண்ணாமையின் ஊன்வாடித்
தெண்ணீரின் கண்மல்கிக்
கசிவுற்றஎன் பல்கிளையொடு
பசிஅலைக்கும் பகைஒன்றுஎன்கோ?

அன்னதன்மையும் அறிந்துஈயார்
நின்னதுதாஎன நிலைதளர
மரம்பிறங்கிய நளிச்சிலம்பின்
குரங்குஅன்ன புன்குறுங்கூளியர்
பரந்தலைக்கும் பகைஒன்றுஎன்கோ?

ஆஅங்கு எனைப்பகையும் அறியுநன்ஆய்
எனக்கருதிப் பெயர்ஏத்தி
வாயாரநின் இசைநம்பிச்
சுடர்சுட்ட சுரத்துஏறி
இவண்வந்த பெருநசையேம்;

எமக்குஈவோர் பிறர்க்குஈவோர்
பிறர்க்குஈவோர் தமக்குஈபவென
அனைத்துஉரைத்தனன் யான்ஆக
நினக்குஒத்தது நீநாடி
நல்கினை விடுமதி பரிசில் அல்கலும்

தண்புனல் வாயில் துறையூர் முன்றுறை
நுண்பல மணலினும் ஏத்தி
உண்குவம் பெருமநீ நல்கிய வளனே



பொருளுரை:

யாழின் பத்தர் என்னும் உறுப்பின் பின் பக்கத்தில் உள்ள பல தையல்களைப் போல், 
என் துணியின் தையல்களின் இடைவெளியில் உள்ள இடுக்குகளில் பற்றிப் பிடித்துக்கொண்டு 
அங்கே தங்கியிருக்கும் ஈர்களின் கூட்டத்தோடு கூடிய பேன்களை எனக்குரிய பகைகளில் ஒன்று என்பேனோ? 

உண்ணாததால் உடல் வாடி, கண்களில் நீர் பெருகி இருக்கும் என்னையும் 
என் சுற்றத்தாரையும் வருத்தும் பசியை எனக்குரிய பகைகளில் ஒன்று என்பேனோ? 

எங்கள் நிலையை அறிந்தும் எங்களுக்கு ஒன்றும் அளிக்காமல், 
”உன்னிடத்து உள்ளதைத் தா” என்று கூறி எங்களை நிலை தடுமாறுமாறு வருத்தும், 
மரங்கள் நிறைந்த குளிர்ந்த மலையில் வாழும் குரங்குகள் போல் பரவி வந்து வழிப்பறி 
செய்யும் இழிந்த குணமுள்ள குள்ளரை எனக்குரிய பகைகளில் ஒன்று என்பேனோ?

எனக்குரிய எல்லாப் பகைகளையும் அறிபவன் ஆய் அண்டிரன் என்று எண்ணி, 
உன் பெயரைப் புகழ்ந்து, உன் புகழை வாயார வாழ்த்துவதை விரும்பி, 
வெயில் சுட்டெரிக்கும் வெப்பமான வழிகளைக் கடந்து பெரும் ஆசையோடு இங்கே வந்துள்ளோம். 

எங்களுக்குப் பரிசு அளிப்பவர்கள்தான் எதையும் எதிர்பார்க்காமல் உண்மையாகவே பிறருக்கு ஈகை செய்பவர்கள். 
மற்றவர்களுக்குப் பொருள் கொடுத்து உதவி செய்பவர்கள் (அவர்களிடத்திருந்து எதையாவது எதிர்பார்த்துக் கொடுப்பதால்) 
தமக்கே ஈகை செய்பவர்கள் என்றுதான் நான் கூறுவேன். 

ஆராய்ந்து, உனக்குத் தகுந்த முறையில் நீ எங்களுக்குப் பரிசளித்து எங்களை அனுப்புவாயாக. 
குளிர்ந்த நீரோடுகின்ற வாய்த்தலைகளையுடைய துறையூரில் உள்ள ஆற்று மணலினும் 
அதிக நாட்கள் நீ வாழ்க என நாள் தோறும் வாழ்த்தி, 
நீ கொடுக்கும் செல்வத்தை வைத்து நாங்கள் உண்போம்


Description:(A song About Vel Aai Andiran)

Shall I say the lice in my head as my enemies ? 
Shall I say the poverty which tortures me and my relatives as my enemy ? 
Shall I say the dwarfs who seize our things like the monkeys in the hilly way as my enemies? 

We have come through this hard  forest way thinking that  you will know all our enemies and give us gifts. 
Those who help the poor are the real helpers. 
Those who help the rich are helping themselves. 

So you send us giving gifts. We will praise you to live more than the sand on the bank of Thuraiyoor. 
We will live with the wealth given by you. 
-Thuraiyoor Odaikkizhaar

முலம்:
http://puram400.blogspot.ie/2010/01/136.html
http://thamizhanna.blogspot.ie/2011/09/purananooru-135-to-150-english.html

No comments: