பாடியவர்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
திணை: காஞ்சி
துறை: வஞ்சினக் காஞ்சி
நகுதத் கனரே, நாடு மீக் கூறுநர்;
இளையன் இவன் என உளையக் கூறிப்
படுமணி இரட்டும் பாவடிப் பணைத்தாள்
நெடுநல் யானையும், தேரும், மாவும்,
படைஅமை மறவரும், உடையும் யாம் என்று
உறுதுப்பு அஞ்சாது, உடல்சினம் செருக்கிச்
சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அருஞ்சமஞ் சிதையத் தாக்கி, முரசமொடு
ஒருங்கு அகப் படேஎன் ஆயின்; பொருந்திய
என் நிழல் வாழ்நர் சென்னிழல் காணாது,
கொடியன்எம் இறை எனக் கண்ணீர் பரப்பிக்,
குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக!
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக,
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைக, என் நிலவரை;
புரப்போர் புன்கண் கூர,
இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே.
பொருளுரை:
“இந்த நாட்டைப் புகழ்ந்து கூறுபவர்கள் ஏளனத்துக்குரியவர்கள்; இவன் இளையவன்” என்று என் மனம் வருந்துமாறு கூறி,
தங்களிடத்து மாறி மாறி ஒலிக்கும் மணிகளணிந்த பரந்த பெரிய பாதங்களையுடைய நெடிய நல்ல யானைகளும்,
தேர்களும், குதிரைகளும் படை வீரர்களும் இருப்பதை எண்ணி, எனது வலிமையைக் கண்டு அஞ்சாது,
என்னைப்பற்றி இழிவாகப் பேசும் சினத்தொடு கூடிய வேந்தரைப் பொறுத்தற்கரிய போரில் அழியுமாறு தாக்கி அவர்களையும்
அவர்களது முரசுகளையும் கைக்கொள்வேன்.
நான் அவ்வாறு செய்யேனாயின், என் குடை நிழலில் வாழும் மக்கள் சென்றடைய வேறு இடமில்லாமல்,
“ எம் வேந்தன் கொடியவன்” என்று கண்ணீர் வடித்து அவர்களால் கொடுங்கோலன் என்று தூற்றப்படுவேனாக.
மற்றும், மிகுந்த சிறப்பும் உயர்ந்த கேள்வியுமுடைய மாங்குடி மருதன் முதல்வனாக உலகத்தோடு நிலைபெற்ற
பலரும் புகழும் புலவர்கள் என்னைப் பாடாது என் நாட்டைவிட்டு நீங்குக.
என்னால் காப்பாற்றப்படுபவர் துயரம் மிகுந்து என்னிடம் இரக்கும் பொழுது அவர்கட்கு ஈகை
செய்ய இயலாத வறுமையை நான் அடைவேனாக.
Description: (A Song Written By Thalaiyaalangkaanaththu Seruvendra Paandiyan Nedunjchezhiyan)
The enemies said “those who praise his country are laughable.
He who rules the country is too young.”
Not knowing my strength they said that they had big elephants, chariots, horses and warriors.
They told unbearable words which made me angry.
I will fight with them so that they run away in fear.
If I do not do like that let the people under the shadow of my white umbrella shed tears
and say that our king is a cruel king.
Let the poets having great fame and scholarship like Maangudi Marudhan not sing my land.
Let my relatives get poverty. Let me get poverty so that I cannot give to the poor.
முலம்:
http://puram400.blogspot.in/2009/04/puranaanuuru-poem-72.html
http://thamizhanna.blogspot.in/2010/10/purananooru-71-to-100-english.html
No comments:
Post a Comment