Thursday, February 25, 2016

புறநானூறு - 32. பூவிலையும் மாடமதுரையும்!

புறநானூறு - 32. பூவிலையும் மாடமதுரையும்!

பாடியவர்: கோவூர்கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி.
திணை: பாடாண். 
துறை: இயன்மொழி.
சிறப்பு: சோழனது நினைத்தது முடிக்கும் உறுதிப்பாடு. 


கடும்பி னடுகல நிறையாக நெடுங்கொடிப் 
பூவா வஞ்சியுந் தருகுவ னொன்றோ 
வண்ண நீவிய வணங்கிறைப் பணைத்தோள் 
ஒண்ணுதல் விறலியர் பூவிலை பெறுகென 
மாட மதுரையுந் தருகுவ னெல்லாம் 

பாடுகம் வம்மினோ பரிசின் மாக்கள் 
தொன்னிலக் கிழமை சுட்டி னன்மதி 
வேட்கோச் சிறாஅர் தேர்க்கால் வைத்த 
பசுமட் குரூஉத்திரள் போலவவன் 
கொண்ட குடுமித்தித் தண்பணை நாடே. 

பொருளுரை: 

இந்த பழமையான நிலத்திற்கு உரிமையுடையவன் யார் என்று நினைத்துப் பார்த்தால்
 நல்ல அறிவு நுட்பமுள்ள குயக்குலத்து இளையோர் மண்பாண் டங்கள் வனைவதற்கு தேர்க்காலை 
ஒத்த சக்கரத்தில் வைத்த பச்சை மண்ணாகிய கனத்த உருண்டை போல, இந்த குளிர்ந்த மருத நிலத்தை யுடைய நாடு சோழன் நலங்கிள்ளி கருத்திற் கொண்ட முடிபையுடைத்தது. 


ஆதலால், நம் சுற்றத்தாரின் இல்லங்களில், உணவு சமைக்கும் பாத்திரங்கள் நிறையச் சமைக்கப்படும் உணவுப் பொருட்களுக்கு 
விலையாக நீளமான கொடிகளில் பூக்காத வஞ்சியாகிய வஞ்சி நாட்டையும் தருவான் என்ற ஒன்று மட்டுமா! 

நல்ல நிறமுடைய கலவைப் பூச்சினைப் பூசிய வளைந்த சந்தினையுடைய (carrying angle) முன் கையினையும், மூங்கில் போன்ற தோளினையும், 
ஒளிபொருந்திய நெற்றியினையுடைய விறலியர் பூவிற்கு விலையாகப் பெறுக என்று 
மாடங்கள் நிறைந்த மதுரையையும் தருவான்! ஆதலால், பரிசில் மக்களே! நாம் எல்லோரும் அவனைப் பாடுவோம், வாருங்கள்! 

விளக்கம்: 

பூத்தவஞ்சி வஞ்சிக்கொடிக்கும், பூவாவஞ்சி வஞ்சிநகர்க்கும் ஆதலால், பூவாவஞ்சி என்றார் ஆசிரியர் கோவூர் கிழார்.
 பூவாவஞ்சி என்பது கருவூர்க்கு வெளிப்படை. வஞ்சிநகர் வஞ்சிக்கள மென்றும், பின்பு அஞ்சைகளமென்றும் மாறிய காலத்தில் கருவூர் வஞ்சியென வழங்கலாயிற்று. 

விறலியர் பூவிலை பெறுக என்றவிடத்து, பூவிலை மடந்தையராகிய கூத்தியரின் நீக்குதற்கு, 
பூவிலை என்பதைப் பூவிற்கு விலை எனப் பிரித்துப் பொருள் கூறினார். இழை பெற்ற விறலியர், 
தலையில் சூடிக்கொள்ளும் பூவிற்கு விலையாக ’மாட மதுரை தருகுவன்’ என்றார். 

இவ்விரு நகர்க்குமுரிய வேந்தர் இருவரும் தன் வழிப்பட சேரநாட்டைச் சேர்ந்த வஞ்சி நகரமும், பாண்டிய நாட்டைச் சேர்ந்த மதுரை நகரமும் 
சோழன் நலங்கிள்ளியின் ஆதிக்கத்தில் இருந்தன எனத் தெரிகிறது. 


Description: (A Song About Sozhan Nalangkilli)

Sozhan Nalangkilli is able to give Vanji where long flags are waving ,in order to fill up the food vessels of his people and keep them content. 
He is able to give Madhurai which has many storeys as a gift to the dancers who have bent bangles,
 bamboo like shoulders and beautiful foreheads who praise him. 

So oh poets !. Come . Let us praise him. Like the clay which is put by the Kuyavaa children on the wheel gets the shape of the desired vessel,
 this cold , fertile land lives according to his command. -Kovoorkkizhaar


முலம்:
http://thamizhanna.blogspot.ie/2010/07/purananooru-26-to-35-english.html

No comments: