Wednesday, February 3, 2016

புறநானூறு - 10. குற்றமும் தண்டனையும்!

புறநானூறு - 10. குற்றமும் தண்டனையும்!


பாடியோர் : ஊன் பொதி பசுங் குடையார்.
பாடப்பட்டோன் : சோழன் நெய்தலங் கானல் இளஞ்சேட் சென்னி.
திணை : பாடாண்.
துறை : இயன்மொழி. 

வழிபடு வோரை வல்லறி தீயே!
பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே;
நீமெய் கண்ட தீமை காணின்,
ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி;
வந்து, அடி பொருந்தி, முந்தை நிற்பின்,
தண்டமும் தணிதி, நீ பண்டையிற் பெரிதே;
அமிழ்துஅட்டு ஆனாக் கமழ்குய் அடிசில்
வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை
மகளிர் மலைத்தல் அல்லது, மள்ளர்
மலைத்தல் போகிய, சிலைத்தார் மார்ப!
செய்து இரங்காவினைச், சேண்விளங் கும்புகழ்,
நெய்தருங் கானல் நெடியோய்!
எய்த வந்தனம்யாம்; ஏத்துகம் பலவே!  

பொருளுரை: 

உன்னை வழிபட்டு ஒழுகுபவர்களை அவர்கள் சொல்லிக் கண்டறிவதற்கு முன்பே அவர்தம் முகக்குறிப்பால் மனநிலையை 
அறிந்து அவர்க்கு உதவி செய்வாய்! பிறர்மீது குற்றம் சொல்பவரின் சொற்களையும் ஆராய்ந்து தெளிவு கொள்வாய்! 
நீ மனத்தால் ஆராய்ந்து உண்மை எதுவென அறிந்து அறுதியிடப்பட்ட கொடுமையை ஒருவனிடம் கண்டால்
 அதனை நீதி நூற்களில் சொல்லிய படிஆராய்ந்து அத்தீமைக்குத் தக்கபடி தண்டனை தருவாய்! 

மனம் திருந்தி வந்து உன் பாதத்தை அடைந்து உன் முன்னால் நிற்பார்களென்றால் 
அவர் பிழை செய்வதற்கு முன் இயற்கையாகவே அருள் செய்யும் நீ, 
அதனினும் பெரிதாக அருள் செய்து அவருக்குத் தந்த தண்டனையையும் குறைப்பாய்! 
அமிழ்தத்தினும் மேலான சுவையுடன் கூடிய உண்ண உண்ண அருமையான மணம் கமழும் தாளிப்பையுடைய உணவை 
உன்னை நாடி வரும் விருந்தினர்க்கு குறைவில்லாமல் வழங்கி பிறரால் குறை சொல்லப்படாத வாழ்க்கையையும், 
உன் மகளிர் ஊடல் செய்வதன்றி, பகை வேந்தர் உன்னோடு போர் செய்யாத வானவில் போன்ற மாலையை அணிந்த மார்ப! 

முன் ஒரு தவறைச் செய்து, பின் பிழைக்கச் செய்தேன் என்று கருதாத செய்கையையும், 
நெடுங்காலம் விளங்கும் புகழுடன் நெய்தலங்கானல் என்ற ஊரை ஆளும் மிகுபுகழ் உடையவனே!
 உன் பல நற்குணங்களை அறிந்து உன்னைக் கண்டு புகழவே வந்தேன் நான்!


Description:(A Song About Neidhalang Kanalil Pirandha Ilanjchechenni)

You know those who worship you soon. You never accept the ill talks about others.
If some one does harm really you seek the truth and give punishment to him. 
If the punished people come in front of you and worship you touching your feet, 
you show then more mercy than before. You have a faultless life. 
You give tasty food which is tastier than elixir to the strangers without measures.
Your chest is embraced by your wife. Your enemies cannot come near it.
You have worn a colorful and beautiful garland. You never do such deeds for which you have to repent.
You have a vast fame. Oh highness who belongs to Neidhalangkaanal! 
We have come to praise you a lot. -Oonpodhi Pasungkudaiyaar




முலம்:
http://thamizhanna.blogspot.in/2010/05/purananooru-first-15-songs-english.html

No comments: