பால்… நல்லதா!?
”’வெளுத்தது எல்லாம் பால் அல்ல’ என்பது முதுமொழி. மக்களுக்குத் தெரிந்த, எல்லோராலும் வாங்கக்கூடிய, அதிக சிரமம் இல்லாமல் உண்ணக்கூடிய சத்துள்ள ஆகாரம் பால் மட்டும்தான். ஆனால், பால் என்ற பெயரில் நாம் குடித்துக்கொண்டிருக்கும் வெள்ளை திரவம் உண்மையிலேயே பால்தானா? ‘பால் என்ற பெயரில் நாம் விஷத்தைக் குடித்துக்கொண்டிருக்கிறோம்!” என்று அண்மையில் சொன்னார், குழந்தைகள் மற்றும் மகளிர் நலத் துறைக்கான மத்திய அமைச்சர் மேனகா காந்தி. பாலில் அப்படி என்ன பிரச்னை?
பசும்பாலில் மனிதனுக்குத் தேவையான கால்சியம், புரதம் போன்ற சத்துக்கள் உள்ளன என மேற்குலகில் கண்டுபிடித்தார்கள். அதன் பின்னரே பால் மிகப் பெரிய சந்தைப் பொருள் ஆனது. பாலை பவுடராக்கி நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் வந்த பிறகு, பால் வணிகம் இன்னும் பரந்துவிரிந்து சூடு பிடித்தது. சுமார் 40 வருடங்களுக்கு முன் பாலின் ஜீரணத்தன்மை குறித்த கேள்விகள் உருவாகின. குழந்தைப் பருவத்தில் இருப்பவர்கள் பாலை அருந்தினால் அதில் கெடுதல் எதுவும் இல்லை எனவும், வயதானவர்கள் பால் அருந்தினால் பாலில் உள்ள கொழுப்பு, ரத்தக்குழாய்களில் படிந்து மாரடைப்புக்கு அதுவும் காரணம் ஆகிறது எனவும் விவாதங்கள் எழுந்தன. தமிழகத்தில்கூட கலப்பினப் பசுக்களில் இருந்து எடுக்கும் பாலைத் தொடர்ச்சியாக அருந்துவதால், கணையம் பாதிக்கப்படுகிறதா என ஆய்வுகள் இன்று வரை நடக்கின்றன.
எழுத்தாளரும், இயற்கை விவசாய நிபுணருமான பாமயன், பால் பொருட்களின் பின்னணி குறித்து வேறுபட்ட பார்வையை முன்வைக்கிறார். ”பால் நமக்கான உணவே அல்ல. பழங்காலத்தில் நாம் அதிகமாக மோரையும், குறைந்த அளவில் தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றையும் பயன்படுத்திவந்தோம். குளிர்ப்பிரதேசங்களில் வாழ்கிறவர்களுக்கு கொழுப்புச்சத்து அதிகம் தேவை. எனவே ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில் பாலின் பயன்பாடு அதிகம். இங்கே நம்முடைய தட்பவெட்ப நிலைக்கு, மோர்தான் சிறந்த பானம். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்புதான் பால், தமிழர்களின் அன்றாட உணவில் ஒன்று எனப் போதிக்கப்பட்டது. பாலால் என்ன நன்மை என்றால், அது கால்சியம், புரோட்டீன் சத்துக்களைக்கொண்டிருக்கிறது எனச் சொல்வார்கள். ஆனால், நமது தானிய உணவுகளிலும் கால்சியம், புரோட்டீன் சத்துக்கள் கிடைக்கின்றன. அதில் கெடுதல் எதுவும் இல்லை. பொதுவாக அதிக பால் உண்ணும் குழந்தைகள் புஷ்டியாக கொழுகொழு என இருப்பார்கள். ஆனால் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதற்கு பால் உண்டாக்கும் சளியும் ஒரு காரணம்!” என்கிறார்.
ஆனால், அலோபதி மருத்துவர்கள் இந்தக் கருத்தை முற்றாக மறுக்கிறார்கள். ”பாலால் நோய்கள் வருகின்றன என்பது அறிவியல்பூர்வமாக, மருத்துவரீதியாக நிரூபிக்கப்படவில்லை. பால் இன்றைய மனித வாழ்வில் தவிர்க்க முடியாத ஊட்டச்சத்து உணவு. இந்த நிலையில் கலப்படம் இல்லாத தரமான பாலை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதுதான் நம் கோரிக்கையாக இருக்க வேண்டும். மாறாக, பாலே வேண்டாம் எனச் சொல்வது எப்படிச் சரி? கால்சியம் உள்பட புரதச் சத்துள்ள உணவுப் பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கிச் சாப்பிடுவது, சாதாரண ஏழை மக்களுக்கு இயலாத காரியம். அவர்களுக்கு எட்டிய ஊட்டச்சத்து பானம் பால் மட்டுமே! அதற்கும் சிக்கல் உண்டாக்கினால், பெரும்பான்மை மக்கள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக பலவீனம் அடைவார்கள். ஆகவே, அறிவியல் அடிப்படை இல்லாத இதுபோன்ற யூகங்களை மக்கள் நம்பக் கூடாது!” என்கிறார் அரசு மருத்துவர் ஒருவர்.
நன்றி-ஆனந்த விகடன்
No comments:
Post a Comment