கோயில் என்பது தெய்வத்தின் இருப்பிடம் மட்டுமில்லை. கோயில் என்பது விஞ்ஞானபூர்வமாக மனிதனுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல நன்மைகள் செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு கிளினிக் என்றே சொல்லலாம். சாஸ்திரப்படி அமைக்கப்படும் கோயில்கள், பூமியின் காந்த அலைகள் அடர்த்தியாகப் பாயும் இடத்தில் அமைகின்றன. ஊர்க்கோடியிலோ, ஊர் நடுவிலோ, மலையுச்சியிலோ எங்காயினும் கோயிலுக்கென்று இடம் அந்தக் காலத்தில் அமைக்கப்பட்டது இந்த அடிப்படையில்தான்!
இந்த உயர்காந்த அலைகள் (ஹை மேக்னடிக் வேவ்ஸ்) அடர்ந்திருக்கும் இடத்தின் மையப்பகுதியில் கர்ப்பக்கிருகம் (மூலஸ்தானம்) அமைக்கப்படுகிறது. அதனால்தான் கர்ப்பக்கிருகத்தில் மூல விக்கிரகத்தின் அடியில், யந்திரங்கள் பதித்தார்கள். சில உயரிய மந்திரங்கள் பொறிக்கப்பட்ட செப்புத்தகடுகளே யந்திரங்கள்! பூமியின் காந்த அலைகளை செப்புத்தகடுகள் உள்வாங்கி சுற்றுப்புறத்துக்கு அதைப் பாய்ச்சுகிறது. இந்த விஞ்ஞான அடிப்படையில்தான் மின்சாரத்தைக் கொண்டுசெல்ல செப்புக்கம்பிகளை உபயோகப்படுத்துகின்றனர். கர்ப்பக்கிருகத்தைப் பிரதட்சணமாக (க்ளாக்வைஸ்) சுற்றும் பக்தர்களின் உடலில், தானாகவே இந்த காந்த சக்தி மென்மையாகப் பாய்கிறது. அடிக்கடி கோயிலுக்கு வந்து பிரதட்சணம் செய்யச் செய்ய இந்த காந்த சக்தி உடலில் கணிசமாக ஏறுகிறது.
இதனால் உடலில் பாஸிடிவ் எனர்ஜி உண்டாகிறது. இந்தச் சக்தி பூரணமாக பக்தர்களைச் சென்றடைவதற்காகவே, மூலஸ்தானம் மூன்று பக்கமும் பெரிய ஜன்னல்கள் இல்லாமல் அடைக்கப்படுகிறது. இதனால் கர்ப்பக்கிருகத்துக்கு வெளியில் நின்று தரிசிக்கும் பக்தர்களின் மேல் யந்திரத்தின் காந்த சக்தி முழுதாகப் பாய முடிகிறது. மூலஸ்தானத்தில் ஏற்றப்படும் விளக்குகள், உஷ்ண சக்தியையும் வெளிச்ச சக்தியையும் பாய்ச்சுகிறது. கோயிலில் ஒலிக்கும் மணிச் சத்தமும் பூஜை மந்திரச் சப்தங்களும் சவுண்ட் எனர்ஜி-யைத் தருகின்றன. பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு வழங்கப்படும் தீர்த்தத்தில் ஏலக்காய், துளசி, கிராம்பு போன்றவை கலக்கப்படுகின்றன. இந்தப் பண்டங்கள் எல்லாமே மனித ஆரோக்கியத்துக்கு உதவுவதால், தீர்த்தம் புனிதமானதாக மட்டுமில்லாமல் உடல் வளத்துக்கு உபயோகமானதாகவும் ஆகிறது. பெருமாள் கோயிலில் மஞ்சளும், குருவாயூரப்பன் கோயிலில் சந்தனமும், சிவன் கோயிலில் திருநீறும், பொதுவாகக் குங்குமமும் பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றன. இவை எல்லாமே மருத்துவ குணமுடைய வஸ்துக்களை உள்ளடக்கியது.
பெருமாள் கோயிலில் தீர்த்தத்தில் கலக்கப்படும் பச்சைக் கற்பூரம், வாசனையாகவும் வித்தியாசமான சுவையுடையதாகவும் இருக்கும். உடலில் ரத்தக்காயம் ஏற்பட்டால், நாம் உடனே காயம் செப்டிக் ஆகாமல் இருக்க தடவுகிறோமே பென்சாயின் ! அது வேறொன்றுமில்லை, பச்சைக் கற்பூரக் கலவையில் உருவாவதுதான். கர்ப்பக்கிருகத்தில் நம்மேல் பாயக்கூடிய பாஸிடிவ் காந்த அலைகளைப் பெற்றுக் கொள்வதற்காகத்தான் பல கோயில்களில் ஆண்கள் சட்டை அணியாமல் வர வேண்டும் என்று சொல்கிறார்கள். பொதுவாகப் பெண்கள் அணியும் தங்க நகைகளில் கலந்திருக்கும் செம்பின் மூலம் அவர்களுக்கும் இதே எனர்ஜி பாய்கிறது.
கோயில் பிராகாரத்தை 11 முறை, 108 முறை என்று பிரதட்சணம் செய்யும்போது, நமது உடலின் கொழுப்பு தானாக எரிந்து ஆரோக்கியம் கூடுகிறது. அந்தக் காலத்தில் கோயிலுக்குச் சென்று பிரதட்சணம் செய்ததாலேயே சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் தவிர்க்கப்பட்டன. இதோடு வேத கோஷமும், பிரார்த்தனை சுலோகங்களும் சொல்லும்போது, உடலுடன் சேர்ந்து உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகிறது.
நன்றி; http://temple.dinamalar.com/news_detail.php?id=10235
No comments:
Post a Comment