Friday, July 8, 2016

புறநானூறு - 130. சூல் பத்து ஈனுமோ?

 
புறநானூறு - 130. சூல் பத்து ஈனுமோ?

பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண்.
துறை: இயன் மொழி.

விளங்குமணிக் கொடும்பூண் ஆஅய்! நின்னாட்டு
இளம்பிடி ஒருசூல் பத்து ஈனும்மோ?
நின்னும்நின் மலையும் பாடி வருநர்க்கு
இன்முகம் கரவாது உவந்துநீ அளித்த

அண்ணல் யானை எண்ணின் கொங்கர்க்
குடகடல் ஓட்டிய ஞான்றைத்
தலைப்பெயர்த் திட்ட வேலினும் பலவே!

பொருளுரை:

விளங்கும் மணிகளால் செய்யப்பட்ட வளைந்த அணிகலன்களை அணிந்த ஆய்!
உன் நாட்டில், ஒரு இளம்பெண் யானை கருவுற்றால் பத்து குட்டிகளைப் பெறுமோ?

உன்னையும் உன் மலையையும் பாடி வருபவர்களுக்கு இன்முகம் மறைக்காமல்,
மகிழ்ச்சியொடு நீ அளித்த உயர்ந்த யானைகளின் தொகையைக் கணக்கிட்டால்,
நீ கொங்கரை மேற்குக் கடற்கரைப் பக்கம் ஓட்டிய பொழுது
அவர்கள் புறங்காட்டி ஓடிய சமயத்தில்
விட்டுச் சென்ற வேல்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருக்குமே!


Description: (A Song About Vel Aai Andiran)

Oh Aai wearing shining ornaments !
Do the female elephants in your country give birth to ten calves in one delivery ?
You gave elephants to those who came singing about you and your hill with smiling face.
Oh Aai ! If we count the number of elephants given by you ,
they will be more than the number of vels left by the Kongers
when you drove them in the western seashore.
-Uraiyoor Eanichcheri Mudamosiyaar

முலம்:
http://puram400.blogspot.in/2009/11/130.html

No comments: