Tuesday, March 22, 2016

புறநானூறு - 57. காவன்மரமும் கட்டுத்தறியும்!

 
புறநானூறு - 57. காவன்மரமும் கட்டுத்தறியும்!

பாடியவர்: காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்.
பாடப்பட்டோர்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.
திணை: வஞ்சி.
துறை : துணை வஞ்சி.

வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும்
புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன
உரைசால் சிறப்பின் புகழ்சால் மாற!
நின்னொன்று கூறுவது உடையேன்; என்னெனின்

நீயே, பிறர்நாடு கொள்ளும் காலை அவர்நாட்டு
இறங்குகதிர் கழனிநின் இளையரும் கவர்க;
நனந்தலைப் பேரூர் எரியும் நக்க;
மின்னுநிமிர்ந் தன்னநின் ஒளிறுஇலங்கு நெடுவேல்
ஒன்னார்ச் செகுப்பினும் செகுக்க; என்னதூஉம்

கடிமரம் தடிதல் ஓம்புநின்
நெடுநல் யானைக்குக் கந்தாற் றாவே.

பொருளுரை:

திறமையற்றவர்களாக இருந்தாலும் திறமையுடையவர்களாக இருந்தாலும்,
உன்னைப் புகழ்வோர்க்கு அருள் புரிவதில் நீ திருமாலைப் போன்றவன்.
சொல்லுதற்கரிய புகழ் பொருந்திய மாறனே! நான் உன்னிடம் ஒன்று கூறுவேன்.

அது என்னவென்றால், நீ பிறர் நாட்டின் மீது படையெடுத்துச் செல்லும் பொழுது, அவர்களின் நாட்டில்,
வளைந்த கதிர்களையுடய வயல்களை உன்னுடய வீரர்களும் கொள்ளை கொள்ளட்டும்;

அகன்ற பெரிய இடங்கள் உள்ள பெரிய ஊர்களைத் தீயால் வேண்டுமானால் எரிப்பாயாக; மின்னலைப் போல் ஒளியுடன் விளங்கும் உன்னுடைய நெடிய வேல்,
பகைவர்களை அழித்தாலும் அழிக்கட்டும்; அவர்களுடைய காவல் மரங்களை வெட்டுவதை மட்டும் தவிர்ப்பாயாக. ஏனெனில்,
உன் நெடிய யானைகளுக்கு அம்மரங்கள் கட்டுத் தறியாகும் தகுதி அற்றவை.


Description: (A Song About Paandiyan Ilavandhigaippalli Thunjchiya Nanmaaran)

Though they are illiterate or scholars, you save them who praise you like Thirumaal.
Oh Maaraa ! You have plenty of fame which cannot be told.
I will tell you one. Let your warriors take the yield of your enemies' fields.

Let them destroy their big towns by lighting fire. Let your vel, which shines like the lightning, kill your enemies.
But you don't cut down the guarding trees because they are tender trees. They are not useful to tie up your strong elephants.
-Kaavirippoompattinaththu Kaarikkannanaar

No comments: