Thursday, March 17, 2016

புறநானூறு - 52. ஊன் விரும்பிய புலி !

புறநானூறு - 52. ஊன் விரும்பிய புலி !

பாடியவர்: மருதன் இளநாகனார்; மருதிள நாகனார் என்பதும் பாடம்.
பாடப்பட்டோன்: பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன்
வழுதி. திணை: வாகை. 
துறை; அரச வாகை.
குறிப்பு; நாயும் புலியும் என்னும் வல்லாடல் பற்றிய செய்தி. 

அணங்குஉடை நெடுங்கோட்டு அளையகம் முனைஇ
முணங்குநிமிர் வயமான் முழுவலி ஒருத்தல்
ஊன்நசை உள்ளம் துரப்ப, இரைகுறித்துத்
தான்வேண்டு மருங்கின் வேட்டுஎழுந் தாங்கு

வடபுல மன்னர் வாட அடல்குறித்து
இன்னா வெம்போர் இயல்தேர் வழுதி!
இதுநீ கண்ணியது ஆயின் இருநிலத்து
யார்கொல் அளியர் தாமே? ஊர்தொறும்
மீன்சுடு புகையின் புலவுநாறு நெடுங்கொடி

வயல்உழை மருதின் வாங்குசினை வலக்கும்
பெருநல் யாணரின் ஒரீஇ இனியே
கலிகெழு கடவுள் கந்தம் கைவிடப்
பலிகண் மாறிய பாழ்படு பொதியில்,
நரைமூ தாளர் நாயிடக் குழிந்த

வல்லின் நல்லகம் நிறையப் பல்பொறிக்
கான வாரணம் ஈனும்
காடாகி விளியும் நாடுடை யோரே.


பொருளுரை:

அச்சம் தரும் நெடிய சிகரங்களையுடைய மலையிலுள்ள குகையில் இருப்பதை வெறுத்து, 
சோம்பல் முறித்து எழுந்த வலிமை நிரம்பிய ஆண்புலி, இரையை விரும்பும் உள்ளத்தால் உந்தப்பட்டு, 
அது வேண்டிய இடத்தே விரும்பிச் சென்றது போல, வட நாட்டு வேந்தரைக் கொல்லுவதை எண்ணி, 
கொடிய போரைச் செய்வதற்கேற்ப நன்கு செய்யப்பட்ட தேரையுடைய வழுதி! 

நீ கருதியது போர் எனின் உன்னை எதிர்த்து நிற்பவர்கள் அனைவரும் இரங்கத் தக்கவர்கள். முன்பு, 
உன் பகைவர்களின் நாடுகளில், ஊர்தோறும் மீன் சுடுகின்ற புகையினது புலால் நாற்றம், 
வயல்களின் அருகே உள்ள மருதமரத்தின் வளைந்த கிளைகளைச் சூழ்ந்து இருக்கும். அத்தகைய நீர் வளமும், 
நிலவளமும், புதுவருவாயும் உள்ள ஊர்கள், இப்பொழுது அந்த வளமனைத்தும் இழந்து காணப்படுகின்றன. 

மற்றும், அந்நாடுகளில் ஆரவாரமான ஒலியுடன் விளங்கிய வழிபாட்டு இடங்களின் தூண்களிலிருந்து தெய்வங்கள் விலகியதால் வழிபாட்டு இடங்கள் 
இப்பொழுது பாழடைந்த ஊர்ப்பொது இடங்களாயின. அந்தப் பொதுவிடங்களில், 
நரையுடன் கூடிய முதியவர்கள் சூதாடும் காய்களை உருட்டிச் சூதாடியதால் தோன்றிய குழிகளில், 
புள்ளிகள் உள்ள காட்டுக் கோழிகள் முட்டையிடுகின்றன. உன் பகைவர்களின் நாடுகள் இவ்வாறு காடகி அழியும்.


Description: (A Song About Paandiyan Koodakaaraththuth Thunjchiya Maaran Vazhudhi)

The stong tiger in the cave which is in the mountain which has high peaks and goddesses, 
hates being idle and goes for hunting to get its prey. 

Oh Maaran Vazhudhi ! You are like that strong tiger. 
You fought a big war so that the kings of the north were destroyed. 
You have a beautiful chariot. 

If it is a war begun by you with a desire , there is none to stand against you and escape in this world. 
The countries of your enemies who oppose you will become waste forests and vanish. 

Their towns will be filled with the odour and smoke while roasting the fish. 
Their fertile lands will loose their new income. 
There will not be any worship. 
The altars will become useless places. 

The old people will be gambling. 
The wood hens which have dots on their feathers will lay eggs where ever there are pits. 
-Marudhan Ilanaahanaar

No comments: