Tuesday, March 15, 2016

புறநானூறு - 50. கவரி வீசிய காவலன்!

புறநானூறு - 50. கவரி வீசிய காவலன்!

பாடியவர்: மோசிகீரனார்.
பாடப்பட்டோன்: சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை.
திணை:பாடாண். 
துறை: இயன் மொழி.
குறிப்பு: அறியாது முரசுகட்டிலில் ஏறியவரைத் தண்டம் செய்யாது துயில் எழுந் துணையும் கவரிகொண்டு வீசினன் சேரமான்; அது குறித்துப் புலவர் பாடிய செய்யுள் இது. 

மாசற விசித்த வார்புஉறு வள்பின்
மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞை
ஒலிநெடும் பீலி ஒண்பொறி மணித்தார்
பொலங்குழை உழிஞையடு பொலியச் சூட்டிக்

குருதி வேட்கை உருகெழு முரசம்
மண்ணி வாரா அளவை எண்ணெய்
நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை
அறியாது ஏறிய என்னைத் தெறுவர
இருபாற் படுக்குநின் வாள்வாய் ஒழித்ததை

அதூஉம் சாலும்நற் றமிழ்முழுது அறிதல்
அதனொடும் அமையாது அணுக வந்துநின்
மதனுடை முழவுத்தோள் ஓச்சித் தண்ணென
வீசி யோயே; வியலிடம் கமழ
இவண்இசை உடையோர்க்கு அல்லது அவணது

உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை
விளங்கக் கேட்ட மாறுகொல்
வலம்படு குருசில்நீ ஈங்குஇது செயலே.

பொருளுரை:

குற்றமில்லாமல் வாரால் இறுக்கிக் கட்டப்பட்டு, வயிரங் கொண்ட கரிய மரத்தால் செய்யப்பட்டு, 
நடுவிடம் அழகாக விளங்குமாறு நெடிய மயில் இறகுகளால் அலங்கரிக்கப்பட்டு, 
நீலமணிகளும் பொன்னிறமான உழிஞைப் பூக்களும் அணிந்து, 
குருதிப்பலியை விரும்பும் அச்சம் தரும் முரசு, நீராட்டுவதற்காகக் கொண்டு செல்லப்பட்டிருந்தது. 

அவ்வேளையில், எண்ணெய் நுரையை முகந்து வைத்ததுபோல் இருந்த மெல்லிய மலர்க் கட்டிலை முரசுக்கட்டில் என்று அறியாது நான் ஏறிப் படுத்தேன். 
என் செயலுக்காக என்னைச் சினந்து, இரு கூறாக வெட்டக்கூடிய உன் கூரிய வாளால் வெட்டாமல் விடுத்தாய். 
நீ தமிழை நன்கு அறிந்தவன் என்பதற்கு அதுவே சான்று. அத்தோடு அமையாமல், என்னை அணுகி, உன்னுடைய வலிய, 
முரசு போன்ற தோளை வீசிச் சாமரத்தால் குளிர்ச்சி தரும் வகையில் விசிறியவனே! வெற்றி பொருந்திய தலைவ! பரந்த இவ்வுலகத்தில் 
புகழோடு வாழ்ந்தவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு விண்ணுலகத்தில் வீடு பேறு இல்லை என்பதை நன்கு கேள்விப்பட்டிருந்ததால்தான் 
நீ இவ்விடத்து இச்செயலைச் செய்தாய் போலும்.


Description: (A Song About Seramaan Thahadoor Erindha Perunjcheral Irumporai)

Not knowing that it is a war drum which was made out of strong tree, adorned with the feathers of peacock, 
sapphire garland, uzhingai flower made up of gold and which is kept safe has taken for holy bath 
and not knowing the cot on which small flowers are spread is the cot for the war drum , I have slept on it. 


But you did not kill me with your sword. It is an evidence for your greatness of knowing Thamizh. 
Instead of getting angry with me , you come closer to me and with your gem like beautiful shoulder, 
you fanned me so that cold wind touches my body. 

Oh victorious king! Do you do this to prove that those who have fame in this world alone have the happiness in the heaven? 
-Mosikeeranaar

No comments: