Saturday, February 27, 2016

புறநானூறு - 34. செய்தி கொன்றவர்க்கு உய்தி இல்லை!

 
புறநானூறு - 34. செய்தி கொன்றவர்க்கு உய்தி இல்லை!

பாடியவர்: ஆலத்தூர் கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை:பாடாண்.
துறை: இயன்மொழி.
சிறப்பு: 'செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்' என்னும் அறநெறி பற்றிய செய்தி.

ஆன்முலை யறுத்த வறனி லோர்க்கும்
மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்
குரவர் தப்பிய கொடுமை யோர்க்கும்
வழுவாய் மருங்கிற் கழுவாயு முளவென
நிலம்புடை பெயர்வ தாயினு மொருவன்

செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென
அறம்பா டிற்றே யாயிழை கணவ
காலை யந்தியு மாலை யந்தியும்
புறவுக் கருவன்ன புன்புல வரகின்
பாற்பெய் புன்கந் தேனொடு மயக்கிக்

குறுமுயற் கொழுஞ்சூடு கிழித்த வொக்கலொ
டிரத்தி நீடிய வகன்றலை மன்றத்துக்
கரப்பி லுள்ளமொடு வேண்டுமொழி பயிற்றி
அமலைக் கொழுஞ்சோ றார்ந்த பாணர்க்
ககலாச் செல்வ முழுவதுஞ் செய்தோன்

எங்கோன் வளவன் வாழ்க வென்றுநின்
பீடுகெழு நோன்றாள் பாடே னாயிற்
படுபறி யலனே பல்கதிர்ச் செல்வன்
யானோ தஞ்சம் பெருமவிவ் வுலகத்துச்
சான்றோர் செய்த நன்றுண் டாயின்

இமயத் தீண்டி யின்குரல் பயிற்றிக்
கொண்டன் மாமழை பொழிந்த
நுண்பஃ றுளியினும் வாழிய பலவே.

பொருளுரை:

குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனிடம் பெருஞ்செல்வம் பரிசில் பெற்றுச் செல்லும் தன்னை,
அவன் ‘எம்மை நினைத்து மறுபடியும் வருவீரோ?’ என்று கேட்க, 'அழகிய ஆபரணங்களையணிந்த பெண்ணின் கணவனே!
பசுவின் பால் தரும் முலையை அறுத்து, முலையாற் பெறும் பயனைக் கெடுத்த தீவினை யாளர்க்கும்
சிறந்த ஆபரணங்களை அணிந்த பெண்களின் கர்ப்பத்தை அழித்தோர்க்கும்
குரவர் வருந்த கொடுமை செய்தோர்க்கும் அவரவர் செய்த பாதகத்தினை ஆராய்ந்து அவற்றைப் போக்கும் பிராயச்சித்தமும் உண்டு என்றும்,

நிலநடுக்கத்தால் நிலமே மேடு பள்ளமாக, பள்ளம் மேடாக பெயர்வதானாலும் ஒருவன் செய்த உதவியை மறந்து கொன்றோர்க்கு
அவற்றின் விளைவுகளிலிருந்து பிழைக்கும் வழி இல்லை என்றும் அறநூல்கள் கூறுகின்றன.

புன்செய் நிலத்தில் விளைந்த புறாவின் கருவாகிய முட்டை போன்ற வரகினது அரிசியை பால் விட்டு சமைத்த சோற்றில்
தேனும் கலந்து இளமுயலின் கொழுத்த சுடப்பட்ட இறைச்சியைத் தின்ற என் சுற்றத்தோடு
 இலந்தை மரங்கள் நிறைந்த அகன்ற பொது வெளியிடத்தில் கள்ளமில்லா உள்ளத்துடன் வேண்டிய
இன்சொற்களைப் பலவாறாகப் பேசியபடி பெரிய கட்டியாக வழங்கிய சுவைமிகுந்த சோற்றைப் பாணர்கள் உண்பார்கள்.

அவர்களுக்கு நீங்காத செல்வம் எல்லாம் முழுமையாகக் கொடுத்தவன்
எங்களுடைய வேந்தனாகிய வளவன் வாழ்வானாக என்று சொல்லி அதிகாலையிலும் மாலை வேளையிலும் உனது பெருமை
பொருந்திய வலிய திருவடிகளைப் பாடவில்லை என்றால் பல கதிர்களையுடைய செல்வனாகிய கதிரவன் தோன்றமாட்டான்.

பெருமானே, நானோர் எளியவன்! இவ்வுலகில் நற்குணங்கள் அமைந்த சான்றோர்கள் செய்த நல்ல செயல்கள் உண்டாயின்
இமயமலையில் திரண்டு இனிய ஓசையுடன் கீழ்க்காற்றால் வரும் பெருத்த மழை சொரிந்த நுண்ணிய பல துளிகளை விட பல காலம் நீ வாழ்வாயாக!
என்று ஆலத்தூர்கிழார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை வாழ்த்துகின்றார்.


Description: (A Song About Sozhan Kulamuttraththuth Thunjchiya Killivalavan)

There is compensation even for those who cut the breasts of the cows,
those who do abortion to ladies who wear beautiful ornaments and those
who make their parents worry.

The ethical books say that even if the world becomes upside down,
there is no compensation for those who forget gratitude.

Oh lord of the lady who has worn beautiful ornaments !
Our group eats the rice of varahu cooked with milk and mixed with honey in the morning and evening.
We also eat the fatty, warm flesh of the rabbit.
We willingly converse with the Paanaas who have frank hearts,
in the common place where there are ilandhai trees.

Oh Killivalavaa ! You give large quantity of wealth to those Paanaas who are eating good food happily.
If I fail to greet you and praise your good feet, the sun will not appear.

I am a simple person. I will not do mistakes.
If it is true that the good deeds done by the nobles will be stable,
you long live more than the droplets shower by the rainy cloud which forms on the Himalaya.

-Aalaththoorkkizhaar


முலம்:

1 comment:

Heenastyle USA said...

Latest Salwar kameez designs online at Heenastyle shopping, Buy beautiful salwar suits designer collection and get exciting discounted deals on indian salwar kameez. http://www.heenastyle.com/salwar