Monday, February 15, 2016

புறநானூறு - 22. ஈகையும் நாவும்!

புறநானூறு - 22. ஈகையும் நாவும்!

பாடியவர்: குறுங்கோழியூர் கிழார்.
பாடப்பட்டோன்: சேரமான் யானைக்கட் சேஎய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை.
திணை:வாகை.
துறை: அரசவாகை.


தூங்குகையா னோங்குநடைய 
உறழ்மணியா னுயர்மருப்பின 
பிறைநுதலாற் செறனோக்கின 
பாவடியாற் பணையெருத்தின 
தேன் சிதைந்த வரைபோல 

மிஞிறார்க்குங் கமழ்கடாத் 
தயறுசோரு மிருஞ்சென்னிய 
மைந்துமலிந்த மழகளிறு 
கந்துசேர்பு நிலைஇவழங்கப் 
பாஅனின்று கதிர்சோரும் 

வானுறையும் மதிபோலும் 
மாலைவெண் குடைநீழலான் 
வாண்மருங்கிலோர் காப்புறங்க 
அலங்குசெந்நெற் கதிர்வேய்ந்த 
ஆய்கரும்பின் கொடிக்கூரை

சாறுகொண்ட களம்போல 
வேறுவேறு பொலிவுதோன்றக் 
குற்றானா வுலக்கையாற் 
கலிச்சும்மை வியலாங்கட் 
பொலந்தோட்டுப் பைந்தும்பை 

மிசையலங் குளைய பனைப்போழ் செரீஇச் 
சினமாந்தர் வெறிக்குரவை 
ஓத நீரிற் பெயர்பு பொங்க 
வாய்காவாது பரந்துபட்ட 
வியன்பாசறைக் காப்பாள 

வேந்துதந்த பணிதிறையாற் 
சேர்ந்தவர் கடும்பார்த்தும் 
ஓங்குகொல்லியோ ரடுபொருந 
வேழநோக்கின் விறல்வெஞ்சேஎய் 
வாழிய பெருமநின் வரம்பில் படைப்பே 

நிற்பாடிய வலங்குசெந்நாப் 
பிற்பிறரிசை நுவலாமை 
ஓம்பா தீயு மாற்ற லெங்கோ 
மாந்தரஞ் சேரலிரும்பொறை யோம்பிய நாடே 
புத்தே ளுலகத் தற்றெனக் கேட்டுவந் 

தினிது கண்டிசிற் பெரும முனிவிலை 
வேறுபுலத் திறுக்குந் தானையொடு 
சோறுபட நடத்திநீ துஞ்சாய் மாறேபொருளுரை: 

அசைந்த பெரும் தும்பிக்கையுடன் தலையை உயர்த்தி நடக்கும் உயர் நடையையுடையனவும், 
அந்நடைக்கேற்ப ஒன்றுக்கொன்று மாறுபட்டு ஒலிக்கும் மணியுடனே உயர்ந்த தந்தக் கொம்பினை உடையனவும், 
பிறை வடிவமாக இடப்பட்ட மத்தகத்துடன் சினம் பொருந்திய பார்வையை உடையனவும், 
பரந்த பெரிய காலடி யுடனே பெருத்த கழுத்தையுடையனவும் தேனழிந்த மலை போல தேனீக்கள் ரீங்கரிக்கும் வாசமிகு மதத்துடனே 
புண் வழலையிலிருந்து நீர் வடியும் பெரிய தலையை உடையனவுமாகிய வலிமை மிக்க இளங்களிறு நிற்கிறது. 

அக்களிறு கட்டப்பட்ட கம்பத்தைப் பொருந்தித் தான் நின்ற நிலையிலே நின்று அசைய, பக்கத்தே நின்று கிரணத்தை விடுகின்ற வானத்திலே இருந்து உறையும் சந்திரன் போலும், 
முத்து மாலையை யுடைய வெண்கொற்றக் குடையின் நிழலருகில் 
தம் அருகில் வாள் இல்லாதோர் அக்குடையே காவலாக உறங்க அசைந்த செந்நெற் கதிரால் வேயப்பட்டு மெல்லிய கரும்புகளால் கட்டப்பட்ட ஒழுங்கான கூரை ஆகியனவும்,
 விழா எடுத்து நடத்தப்பட்ட இடம் போல அந்த இடம் வேறு வேறாக அழகுபடத் தோன்றுகிறது. 

குற்று நிறுத்தப்படாத உலக்கை ஒலியுடனே மிக்க ஆரவாரத்தையுடைய அகன்ற அந்த இடத்தில் பொன்னாலான இதழுடைய பசுமையான தும்பை மலர்களுடன் 
அதன் அருகிலே அசைந்த தலை யினை உடைய பனந்தோட்டைச் சொருகி சினத்தை யுடைய வீரர் வெறியோடு ஆடும் குரவைக் கூத்தின் ஒலியானது 
கடல் நீர் ஆர்ப்பரித்துப் பொங்குவது போல இருக்கிறது. உனது படைப் பெருமையால் பகைவர் அஞ்சும் மதிப்புடைய காவலின்றிப் பரந்து கிடக்கின்ற அகன்ற பாசறை யுடைய காவலனே! 

மாற்றரசர் பணிவுடன் தந்த திறைப்பொருட்களால் உன்னை அடைந்தவர்களுடைய சுற்றத்தார்க்குக் கொடுத்தும் உயர்ந்த கொல்லிமலையினரின் வெற்றி மிகுந்த தலைவனே! 
யானையின் நோக்குப் போன்ற பார்வையுடன் வெற்றியை விரும்பும் சேயே! நீ வாழ்க பெருமானே! 

உன் எல்லையில்லாத செல்வம், உன்னைப் பாட அசைந்த செவ்விய நாக்கு பின்னைப் பிறருடைய புகழைச் சொல்லாமல் அளவில்லாது வழங்கும் தன்மையுடைய 
எங்கள் அரசர் மாந்தரஞ் சேரலிரும் பொறை பாதுகாத்த நாடேயாகும் என்றும், தேவ லோகத்தைப் போன்றது என்றும் பிறர் சொல்லக் கேட்டு வந்து இனிமையாக கண்குளிர உன்னைக் கண்டேன் பெருமானே! 

முயற்சியில் வெறுப்பும், சினமும் இன்றி வேற்று நாட்டிற்குப் படையெடுத்துப் படையோடு சென்று உன் நாட்டில் வளம் பெருகும்படி செய்து சோம்பலின்றி நீ ஆட்சி செய்வாயாக! 

Description:( A Song About Seramaan Yaanaikkatchey Maandharanjcheral Irumporai)

The young elephants having moving trunks, majestic walk, ringing bells, long tusks, crescent like foreheads , 
angry look, broad feet, broad necks like the honey shedding mountains, sweet smelling mad water shedding heads 
where the bees hum are moving in the elephant shed. 

Near that place , under the shadow of the white umbrella which is decorated with pearl garlands and 
which shines like the full moon spreading milk like rays, the warriors those who no swords sleep without worry. 

Near the battle field , army camps which are built with sugarcane and thatched with hay look like villages 
where festivals are to be celebrated. There the sound of digging paddy with pestle is heard always. 

There the noise of the kuravai dance danced by your warriors who are in joy will be sounding like the roaring sea. 


Oh king who belongs to the vast army camp ! 
Oh king of Kolli hills, who remove the sorrow of those who come to you , by giving the tributes given by your enemies ! 

You have an angry look like an angry elephant. You wish only victory always. 
You have a large quantity of wealth. You give in large quantities so that those who get from you need not go to others for gifts. 

I came here hearing that the country ruled by Iarumporai is like the heaven. 
I feel happy on seeing you. You get victory in wars. If you save patronage and ethics, there is no death for you. 

You will get immortal fame. -Kurungkozhiyoorkkizhaar


No comments: