Friday, February 12, 2016

புறநானூறு - 19. எழுவரை வென்ற ஒருவன்!

புறநானூறு - 19. எழுவரை வென்ற ஒருவன்!

பாடியவர் : குடபுலவியனார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை: வாகை. 
துறை: அரசவாகை. 

இமிழ்கடல் வளைஇய ஈண்டுஅகல் கிடக்கைத்
தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து,
மன்உயிர்ப் பன்மையும், கூற்றத்து ஒருமையும்.
நின்னொடு தூக்கிய வென்வேற் செழிய!
இரும்புலி வேட்டுவன் பொறிஅறிந்து மாட்டிய

பெருங்கல் அடாரும் போன்ம் என விரும்பி,
முயங்கினேன் அல்லனோ யானே! மயங்கிக்
குன்றத்து இறுத்த குரீஇஇனம் போல,
அம்புசென்று இறுத்த அறும்புண் யானைத்
தூம்புஉடைத் தடக்கை வாயொடு துமிந்து


நாஞ்சில் ஒப்ப, நிலமிசைப் புரள,
எறிந்துகளம் படுத்த ஏந்துவாள் வலத்தர்
எந்தையோடு கிடந்தோர் எம்புன் தலைப்புதல்வர்;
இன்ன விறலும் உளகொல், நமக்கு?என,
மூதில் பெண்டிர் கசிந்து அழ, நாணிக்

கூற்றுக்கண் ஓடிய வெருவரு பறந்தலை,
எழுவர் நல்வலங் கடந்தோய்! நின்
கழூஉ விளங்கு ஆரம் கவைஇய மார்பே?


பொருளுரை: 

ஒலிக்கும் கடலால் சுற்றிச் சூழப்பட்ட அணுச் செறிந்த வளமான அகன்ற இப்பூமியில் 
தமிழ்ப்படை கைகலந்து போரிட்ட தலையலங் கானத்தில் நிலைபெற்ற பலமடங்கும் உயிர்களையும் 
அவ்வுயிர்களைக் கொல்லும் கூற்றம் ஒன்றே என்பது போல உன்னோடு 
சீர்தூக்கின் நீ ஒருவனே நின்று பகைவரை சலிக்காமல் வெல்லும் வேலினையுடைய செழிய! 

கலங்கி மலையிலே தங்கிய குருவியினம் போல அம்பு சென்று தைத்ததால் ஏற்பட்ட வேதனை பொறுக்கவியலாத புண்களையுடைய யானை களின் 
துளைகளையுடைய தும்பிக்கைகள் வாயுடனே வெட்டி வீழ்ந்து கலப்பையைப் போல நிலத்தின் மீது கிடந்து புரள வெட்டிப் 
போர்க் களத்தில் வீழ்த்த ஏந்திய வாள் வெற்றியை உடையோராய் எம் தலைவனோடு கிடந்தார் எம்முடைய புல்லிய தலையையுடைய மைந்தர்கள். 

இப்படிப்பட்ட வெற்றியும் உண்டோ நமக்கு என்று சொல்லி மறக்குடிப் பெண்டிர் இன்புற்று உவகையால் அழ, 
அது கண்டு நாணி கூற்றம் இரங்கிய அஞ்சத்தக்க போர்க்களத்தில் இரு பெரு வேந்தரும், ஐம்பெரும் வேளிருமாகிய வலிமையான எழுவரையும் வென்றவனே! 

பெரும் புலியைப் பிடிக்கும் வேடன், பாறைகள் செறிந்த குன்றுகளில் முழைகள் (குகைகள்) இருக்குமிடம் அறிந்து,
 அவற்றின் வாயிலில் கற்பலகையால் கதவமைத்து, உள்ளே ஆடுகளைக் கட்டி புலிகளை அதனுள் புகுவித்து, 
அவைகளைப் பிடிக்கும் பொறி போன்றது என விருப்பபட்டு, உனது கழுவி விளங்கிய முத்தாரம் அணிந்த மார்பினைத் தழுவினேன் அல்லவோ நான்! 

திணை: இப்பாடல் வாகைத்திணை ஆகும். வெற்றி பெற்ற மன்னன் வாகைப்பூச் சூடி மகிழ்வது வாகைத்திணை. 
’தலையாலங்கானத்து மன்னுயிர்ப் பன்மையுங் கூற்றத் தொருமையும் நின்னொடு தூக்கிய வென்வேற் செழிய’ என்பதிலிருந்தும், 
’கூற்றுக்கண் ணோடிய வெருவரு பறந்தலை எழுவர் நல்வலங் கடந்தோய்’ என்பதிலிருந்தும் பாண்டியன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் வீரம் புலப்படுகிறது. 

துறை: அரசவாகை ஆகும். 

1. அரசனது இயல்பையோ, வெற்றியையோ எடுத்துரைத்தல் அரசவாகைத் துறையாகும். 

2. ஓதல், வேட்டல், ஈதல், படை வழங்குதல், குடியோம்புதல் ஆகிய ஐந்தும் அரச வாகை எனப்படுகிறது. 

3. அரசவாகையில் பிறரை நோகச் செய்யாத பண்பு, கொடைத்திறம், 
நாட்டின் பரப்பு, நாட்டுமக்கள் அச்சமின்றி வாழ்தல், நாட்டில் விழா, வீரம், பகைவர் அச்சம், பகைவர் திறை தருதல், 
பகைநாட்டு அழிவு, வேள்வி செய்தல் முதலான செய்திகள் கூறப்படுகின்றன


Description: (A Song About Thalaiyaalangkaanaththuch Seruvendra Paandiyan Nedunjchezhiyan)

The warriors are many who fought in Thalaiyaalangkaanam where Thamizh kings fought with each other. 
Yammaa is one who killed many warriors. You are that Yammaa who has a conquering spear. 

Oh Sezhiyaa ! Your chest is like a big stone which is used by the hunters to catch big tigers. 
I embraced your chest with love. 
Like the gathering of the sparrows on the hill , there are many arrows on the body of the elephant . 
The wounded elephant's hollow trunk which is cut by an arrow rolls on the ground like a plough. 

The warriors who killed the elephants with their swords are lying dead on the battle field with their fathers.
 On seeing this , the ladies of the brave family shed tears of pleasure . 

They wondered that a big fame has come to their family because of the brave death of their husbands and sons. 

On seeing their braveness Yamaa himself feels shame. 

In that fearful battle field , you defeat seven kings. The brave chest which I embraced is adorned by pure pearl garland. 

-Kudapulaviyanaar


No comments: