Tuesday, February 9, 2016

புறநானூறு - 16. செவ்வானும் சுடுநெருப்பும்!

புறநானூறு - 16. செவ்வானும் சுடுநெருப்பும்!

பாடியவர்: பாண்டரங் கண்ணனார்.
பாடப்பட்டோன்: சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி.
திணை: வஞ்சி. 
துறை; மழபுல வஞ்சி.

வினைமாட்சிய விரைபுரவியொடு 
மழையுருவின தோல்பரப்பி 
முனைமுருங்கத் தலைச்சென்றவர் 
விளைவயல் கவர்பூட்டி 
மனைமரம் விறகாகக் 

கடிதுறைநீர்க் களிறுபடீஇ 
எல்லுபட விட்ட சுடுதீ விளக்கம் 
செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரிற் றோன்றப் 
புலங்கெட விறுக்கும் வரம்பி றானைத் 
துணைவேண்டாச் செருவென்றிப் 

புலவுவாட் புலர்சாந்தின் 
முருகற் சீற்றத் துருகெழு குருசில் 
மயங்குவள்ளை மலராம்பற் 
பனிப்பகன்றைக் கனிப்பாகற் 
கரும்பல்லது காடறியாப் 

பெருந்தண்பணை பாழாக 
ஏம நன்னா டொள்ளெரி யூட்டினை 
நாம நல்லமர் செய்ய 
ஓராங்கு மலைந்தன பெருமநின் களிறே. 


பொருளுரை: 

போர் செய்யும் செயலுக்கு விரைந்து செல்லும் குதிரைகளோடு 
மேக நிறத்தை ஒத்த கேடயங்ளையும் எடுத்துக் கொண்டு போர் முனை கலங்க முன்னே சென்று 
அவரது நெல் விளையும் நிலங்களை வேண்டுமென்றே கொள்ளையடித்தாய்! 

அவர்களின் வீட்டிலுள்ள மரத்தால் செய்த கதவு, தூண் போன்ற பொருட்களை விறகாக்கி, 
மக்களும் விலங்குகளும் இறங்கி நீரைக் கெடுக்காதபடிக் காவலுள்ள ஊரார் உண்ணுநீர் நிறைந்த நீர்நிலைகளை களிறுகளை இறக்கிக் கலக்கச் செய்தாய்! 

சிவந்த கதிரவன் காண மக்கள் குடியிருக்கும் ஊர்களை அழிக்க 
இடப்பட்ட தீயின் உயர்ந்து ஓங்கிய நெருப்பின் ஒளி நெருப்புச் சுடர்க் கதிர்களைப் பரப்பும் கதிரவனின் செவ்வானம் போலத் தோன்றியது. 
பகைவரது நாட்டை அழிக்கச் செய்யும் எல்லையில்லாத படையினையும் உதவிக்கு வேறு துணைப்படை வேண்டாத போர் வெற்றியினையும் பெற்றாய்! 

பகைவரை வெட்டியதால் ஏற்பட்ட புலால் நாறும் வாளினையும், வெற்றியினால் பூசிப் புலர்ந்த சந்தனத்தையும், 
முருகனின் சீற்றத்துக்கு இணையான மிகுந்த எழுச்சியையும் உடைய தலைவா! 

ஒன்றோடொன்று கலந்த வல்லைக் கொடியும், மலர்ந்த அல்லி மலர்களும், 
குளிர்ச்சி தரும் பகன்றைக் கொடியும் பலாக்கனியும், கரும்பு அல்லாத 
பிற பயிர்கள் வயல்களில் விளையாத பெரிய குளிர்ச்சியும் நீரும் உடைய மருத நிலம் அழியும்படி 
காவலையுடைய நல்ல நாட்டை ஒளிரக்கூடிய நெருப்பை வைத்தாய்! பெருமானே! அஞ்சத்தக்க போரை
நீ விரும்பியபடி செய்ய ஒருங்கிணைந்து உன்னுடைய களிறுகள் யுத்தம் செய்தன. 

திணை: 

இப்பாடல் வஞ்சித்திணை ஆகும். மண்ணாசை காரணமாகப் பகைவர் நாட்டைக் கைக்கொள்ளக் கருதி 
வஞ்சிப் பூவைத் தலையில் சூடிப் பகைவருடன் போரிடுதல் வஞ்சித் திணை ஆகும். 
’விளைவயல் கவர்பூட்டி, மனைமரம் விறகாகக் கடிதுறைநீர்க் களிறுபடீஇ எல்லுபட விட்ட சுடுதீ விளக்கம்’ என்றபடி 
விளையும் நிலங்களைக் கொள்ளையடித்து அவர்களின் வீட்டிலுள்ள மரத்தால் செய்த பொருட்களை விறகாக்கி, 
ஊரார் உண்ணுநீர் நிறைந்த நீர்நிலைகளை களிறுகளை இறக்கிக் கலக்கி, மக்கள் குடியிருக்கும் ஊர்களை தீயிட்டு அழித்தல் 
போன்ற செயல்களைச் செய்வதால் இது வஞ்சித்திண ஆயிற்று. 

துறை: 

இப்பாடல் மழபுல வஞ்சித் துறை. ஏம நன்னாடு ஒள்ளெரியூட்டி யென்பதற்கேற்ப, பகைவர் நாட்டைக் கொள்ளையிடுதல், எரித்தல் ஆகிய 
செயல்களைச் செய்து அழித்தலைப் பற்றிக் கூறுவதால் இது மழபுலவஞ்சித் துறையாகும். 

முடிவுரை: 

போர் நிகழும்போது பகைவர் நாட்டு நெல், கரும்பு முதலியன விளையும் மருத நிலங்களைப் பாழ் செய்வதும், 
நீர்நிலைகளைச் சிதைப்பதும், மக்கள் குடியிருக்கும் வீடுகளையும், ஊர்களையும் தீயிட்டு அழிப்பதும் நிகழ்வது குறித்து 
இப்போர் நிகழ்ச்சி சான்றோர்களால் வெறுக்கப்படுகின்றன. எனவே, இவ்வாறாக இதனைச் சான்றோர் விரித்து பாடலில் சொல்வது 
வேந்தன் உள்ளத்தில் அருள் பிறப்பித்துப் போரைக் கைவிடுத்தல் கருதி என்று அறிதல் வேண்டும். 


Description: (A Song About Rajasooya Velvi Seidha Perunarkkilli)

With the horses which are good in battle, you are spreading your armors which look like the rainy cloud and sending the army to the wars. 
You have captured enemies' paddy fields . You have destroyed their houses and burnt them with the woods of the houses as fire woods. 
You have destroyed the enemies' water sources by sending male elephants.

 The villages are burning like the red sun . You have a strong army which destroys enemies' lands. 
You need no helping force to conquer your enemies . You have a sword which has the smell of flesh. 
You have sweet smelling sandal on your chest. You are like god Murugan in your anger and in appearance. 


You have burnt enemies' countries which have the ponds with vaalai fishes and aambal plants, 
the bush with paahal creepers with fruits and sugarcane growing in big, cold fields.


 Oh lord ! Your elephants also indulge in frightening wars like you. -Paandarangkannanaar

முலம்:
http://eluthu.com/kavithai/124459.html


http://thamizhanna.blogspot.in/2010/05/purananooru-first-15-songs-english.htmlNo comments: