Monday, October 6, 2014

வில்லிபாரதம் உருவான கதை

வைணவப் புலவரான வில்லிபுத்தூரார் சனியூர் என்ற ஊரில் பிறந்தவர். வக்கபாகை என்னுமிடத்தை ஆண்டுவந்த மன்னனான வரபதி ஆட்கொண்டான் என்பவன் வில்லிபுத்தூராரை ஆதரித்து வந்தான். ஒருமுறை வில்லிபுத்தூரார் புலவர்களிடம் போட்டி வைத்து யார் தோல்வி அடைகிறார்களோ அவர்களின் காதுகளை, வென்றவர் அறுக்க வேண்டும் என்று கூறினார். இப்படியாக பல பேருடைய காதுகளைப் போட்டியில் வென்று அறுத்தார் வில்லிபுத்தூரார். ஒருமுறை அவ்வூருக்கு வந்த முருக பக்தரான அருணகிரிநாதர் இந்த செயலை தடுக்க வேண்டும் என்று போட்டியில் கலந்து கொண்டார். அருணகிரியார் பாடிய ஒரு பாடலுக்கு பதில் கூற முடியாமல் வில்லிபுத்தூரார் தோற்றார். அந்த பாடலாவது ..
திதத் தத்தத் தித்தத, திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத் தத்தத் தித்த திதிதித்த தேதுத்து த்திதத்தா
திதத் தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத் தத்தத் தித்தித்தி தீதீ திதி துதி தீ தொத்ததே!
அதன் பொருள்:
திதத்த ததித்த: திதத்த ததித்த என்னும் தாள வாக்கியங்களை,
திதி: தன்னுடைய நடனத்தின் மூலம் நிலைபடுத்துகின்ற,
தாதை: உன்னுடைய தந்தையாகிய பரமசிவனும்,
தாத: மறை கிழவோனாகிய பிரம்மனும்,
துத்தி: புள்ளிகள் உடைய படம் விளங்கும்,
தத்தி: பாம்பாகிய ஆதிசேசனின்,
தா: முதுகாகிய இடத்தையும்,
தித: இருந்த இடத்திலேயே நிலைபெற்று,
தத்து: அலை வீசுகின்ற,
அத்தி: சமுத்திரமாகிய திருப்பாற்கடலையும் (தன்னுடைய வாசற்தலமாகக் கொண்டு),
ததி: ஆயர்பாடியில் தயிர்,
தித்தித்ததே: மிகவும் இனிப்பாக இருக்கிறதே என்று சொல்லிக்கோண்டு,
து: அதை மிகவும் வாங்கி உண்ட (திருமால்),
துதித்து: போற்றி வணங்குகின்ற,
இதத்து: போரின்ப சொரூபியாகிய,
ஆதி: மூலப்பொருளே,
தத்தத்து: தந்தங்களை உடைய,
அத்தி: யானையாகிய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட,
தத்தை: கிளி போன்ற தேவயானையின்,
தாத: தாசனே,
திதே துதை: பல தீமைகள் நிறைந்ததும்,
தாது: ரத்தம் மாமிசம் முதலிய சப்த தாதுக்களால் நிரப்பப்பட்டதும்,
அதத்து உதி: மரணம் பிறப்பு இவைகளோடு கூடியதும்,
தத்து அத்து: பல ஆபத்துக்கள் நிறைந்ததும் (ஆகிய)
அத்தி தித்தி: எலும்பை மூடி இருக்கும் தோல்பை (இந்த உடம்பு),
தீ: அக்னியினால்,
தீ: தகிக்கப்படும்,
திதி: அந்த அந்திம நாளில்,
துதி தீ: உன்னை இவ்வளவு நாட்களாக துதித்து வந்த என்னுடைய புத்தி,
தொத்ததே: உன்னிடம் ஐக்கியமாகி விட வேண்டும்.
நடராச மூர்த்தியாகிய சிவபெருமானும், பிரம்மனும், இடைச்சோலையில் தயிர் உண்டு பாற்கடலையும் ஆதிசேசனையும் பாயலாகக் கொண்டு யோக நித்திரை செய்யும் திருமாலும் வணங்குகின்ற ஆனந்த மூலப் பொருளே, தேவயானையின் தாசனே, ஜனன மரணத்திற்கு இடமாய் சப்த தாதுக்கள் நிறைந்த பொல்லாத இந்த உடம்பை தீயினால் தகிக்கப்படும் பொழுது உன்னை துதித்து வந்த என் சித்தத்தை உன்னுடைய திருவடிக்கு நீ ஆட்படுத்த வேண்டும்.
என்பதே ஆகும்.
மேலும் அருணகிரியார், இனி இது போன்ற போட்டி வைக்கலாகாது எனக் கூறி, வில்லிபுத்தூராரை மன்னித்தார். வில்லிபுத்தூரார் தன் பாவத்தைத் தீர்க்க மகாபாரதத்தைத் தமிழில் எழுதினார். அதுவே வில்லிபாரதம் என்று அழைக்கபடுகிறது.
நன்றி: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D

No comments: